சென்னையில் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஹாங்காங், மொரீஷியஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம்

சென்னை: இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் வேகமாக பரவத் தொடங்கிய கொரோனா காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. அதன்பின்பு கொரோனா வைரஸ் இரண்டாம் அலை, மூன்றாம் அலை என தொடர் பாதிப்புகள் வந்தது. எனினும் முடங்கி இருந்த விமான சேவைகள், படிப்படியாக இயங்கத் தொடங்கின. அந்த வகையில், ஹாங்காங் – சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு மீண்டும் விமான சேவையை வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து இயக்க தொடங்குகிறது. முதலில் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும். பயணிகள் வரவேற்பை பொறுத்து தினசரி விமான சேவைகளாக இயக்கப்படவிருக்கிறது.

அதேபோல் சென்னையில் இருந்து மொரீஷியஸ் நாட்டிற்கு, ஏர் மொரீஷியஸ் விமான சேவைகள் வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்பட்டன. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் விமான சேவை, தொழில்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு, இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வந்தது. இதனால் தொழில்துறையினர் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் மொரீஷியஸ் விமானம், மாணவ மாணவிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு பல்வேறு மருத்துவ கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், மொரீஷியஸ் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற தென்மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். கொரோனா காரணமாக, மொரீஷியஸ்க்கு சென்னையில் இருந்து 4 ஆண்டுகளாக, விமான சேவைகள் இல்லாததால், இந்த மாணவ மாணவிகள், மும்பை அல்லது துபாய் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையில் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஹாங்காங், மொரீஷியஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: