×

இந்தித் திணிப்பால் கொந்தளித்த மகாராஷ்டிரா அரசு நடத்துறீங்களா? காமெடி ஷோவா?..ஆதித்ய தாக்கரே ஆவேசம்


மும்பை: இந்தித் திணிப்பால் மகாராஷ்டிரா கொந்தளித்த நிலையில், அரசு நடத்துறீங்களா? காமெடி ஷோவா? என்று ஆதித்ய தாக்கரே ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள புதிய மொழி கொள்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட உத்தரவின்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியை மூன்றாவது மொழியாகக் கட்டாயமாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவை, ‘இந்தித் திணிப்பு’ என்று கூறி எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதனால் மராத்தி மொழியின் முக்கியத்துவம் குறைந்து போகும் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாஜக கூட்டணி அரசின் இந்த இந்தித் திணிப்பு விவகாரம், மகாராஷ்டிர அரசியலில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக அரசியல் எதிரிகளாக இருந்த தாக்கரே சகோதரர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே, மராத்தி மொழிக்காக ஒரே மேடையில் இணைய உள்ளனர்.

ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் வரும் ஜூலை 6ம் தேதி மாபெரும் பேரணி நடத்தவுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே ஜூலை 7ம் தேதி நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கிடையே, சிவசேனா (உத்தவ்) தலைவர்ஆதித்ய தாக்கரே அளித்த பேட்டியில், ‘மாநில அரசு, அரசாங்கத்தை நடத்துகிறதா அல்லது காமெடி ஷோ நடத்துகிறதா?’ என்று கடுமையாகச் சாடியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் இந்தப் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்தி மொழி திணிப்பு விவகாரம், மராத்தி மொழி பேசும் மக்களிடையே பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இந்தித் திணிப்பால் கொந்தளித்த மகாராஷ்டிரா அரசு நடத்துறீங்களா? காமெடி ஷோவா?..ஆதித்ய தாக்கரே ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Aditya Thackeray ,MUMBAI ,BJP ,Sivasena ,Nationalist Congress ,Indian government ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...