×

இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் குரூப் 4 பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் குரூப் 4 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், அரசால் தீட்டப்படும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பொதுச் சேவையை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். குறிப்பாக அமைச்சுப் பணியாளர்கள்தான் அரசுத் துறைகளின் அடித்தளம். அரசு ஊழியர்கள் இருந்தால்தான் மக்களின் திட்டங்கள் விரைவில் மக்களை சென்றடையும்.

பெரும்பாலான அரசு அலுவலகங்களில், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மக்கள் பெருமளவுக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனிடையே 2 ஆண்டுகளுக்குப் பிறகு 6,244 குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளி வந்திருக்கிறது. லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற நிலையில், 10 விழுக்காட்டிற்கும் குறைவான காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது.

இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூகநீதியினைக் கருத்தில் கொண்டும், அரசின் நலத் திட்டங்கள் மக்களை உடனடியாக சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப காலிப் பணியிடங்களை நிரப்பவும், இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்பவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

The post இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் குரூப் 4 பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OPS ,Chennai ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED ஓபிஎஸ் வலியுறுத்தல் மேகதாது அணை திட்டத்தை முறியடிக்க வேண்டும்