பட்டதாரி ஆசிரியர் இறுதி பணிநியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த சுதா, ஜெயந்தி ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த பிப். 4ம் தேதி நடைபெற்றது. 41,485 பேர் எழுதினர். தேர்வுக்கான வினா குறிப்புகள் பிப். 19ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான நியமன தேர்வில் இறுதி விடை பட்டியல் வெளியிடப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இதில் ஆங்கில பாட ஆசிரியருக்கான தேர்வில் 13 வினாக்களுக்கு என்ன பதிலை தேர்வு செய்திருந்தாலும் மதிப்பெண், 11 வினாக்களுக்கு ஏதாவது 3 பதில்களை தேர்வு செய்தால் மதிப்பெண் என உள்ளது. இவ்வாறு 24 வினாக்கள் தவறாக இருப்பதால் இதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு ஏற்புடையதல்ல. எனவே, தற்போது வெளியிடப்பட்ட இறுதி விடை அடிப்படையில், பணி நியமன பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும். வல்லுநர் குழுவை வைத்து ஆய்வு செய்து இறுதி விடை பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி மஞ்சுளா நேற்று விசாரித்து, இதில் இறுதி பணி நியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்தும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

The post பட்டதாரி ஆசிரியர் இறுதி பணிநியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: