முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசு கல்லூரிகள் ஜூலை 3ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்து இருந்த நிலையில், திடீரென கல்லூரி திறப்பு ஜூலை 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாட பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நடந்து முடிந்துள்ளது. கடந்த 1ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் முதற்கட்டமாகவும், கடந்த 12 தேதி முதல் 20ம் தேதி வரை 2ம் கட்டமாகவும் கலந்தாய்வு நடந்தது.

இந்த 2 கட்ட கலந்தாய்வு முடிவில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பியதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஏற்கனவே வெளியிட்டு இருந்த கலந்தாய்வு குறித்த அட்டவணையில் அரசு கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 22ம் தேதி (இன்று) முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று உயர்கல்வித் துறை அந்த தேதியை மாற்றம் செய்து, புதிய தேதியை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 30ம் தேதி வரை இந்த மாணவர் சேர்க்கை நடைபெறும். அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசு கல்லூரிகள் ஜூலை 3ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: