ஆளுநர் ஆர்.என் ரவிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்..!!


சென்னை: ஆளுநர் ஆர்.என் ரவிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கால தாமதம் செய்து வருகிறார் என்றும் இதனால் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது மிகவும் கவலைக்குரியது என வேதனை தெரிவித்தது.

இந்த நிலையில், நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு அண்ணா தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா ஆகிய 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. ஆளுநரின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, மக்களில் இருந்து ஒருவர் அதிகாரத்திற்கு வர வேண்டும்.

மக்களோடு மக்களாக வளர்ந்து மக்களின் போராட்டத்தில் கலந்து, மக்களுடன் வேர்வையில் நின்று, கட்டிப்பிடிச்சு கண்ணீரை துடைச்சு நிற்பவனை அதிகாரத்தில் வைத்தால் அவருக்கு மக்கள் பிரச்சனை என்றால் என்ன என்று தெரியும். ஆளுநருக்கு மக்கள் பிரச்சனை என்றால் என்ன என்று தெரியுமா? எதுவாக இருந்தாலும் எட்டு கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் நலன் சார்ந்து சட்டங்கள் திட்டங்கள் போட்டு அனுப்பினால் கையெழுத்து போட வேண்டும் அதுதான் உங்க (ஆளுநர்) வேலை. சம்பளம் என்கிட்ட வாங்கிகிட்டு சண்டியர் தனம் பண்ணிட்டு இருந்தா என்ன அர்த்தம். இருக்க வீடு இல்லாமல் மக்கள் இருக்காங்க. ஆளுநருக்கு 150 ஏக்கரில் வீடு. பாஜக ஆளாத மாநிலங்களில் இதுபோன்ற ஆளுநர்களை அனுப்பி மாநில அரசுகளுக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” இவ்வாறு கூறினார்.

The post ஆளுநர் ஆர்.என் ரவிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: