ஆளுநர் என்ன ஆண்டவரா? அமைச்சர் சேகர் பாபு சரமாரி கேள்வி

சென்னை: ஆளுநர் என்ன ஆண்டவரா என அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பியுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் மற்றும் கொளத்தூர் வில்லிவாக்கம் எல்.சி.1 சாலையில் ரூ.61.98 கோடியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நான் அமைச்சராக பொறுப்பேற்ற அறநிலையத்துறையிலிருந்து ஒரு வாகனத்தை கூட என் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தவில்லை. பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எந்த குற்றச்சாட்டும் கிடைக்காததால், கோயில் கார் பிரச்னையை கையில் எடுத்துள்ளார். இதுவரை, 4,250 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்ட ஆட்சி திமுக ஆட்சி. 50,000 ஏக்கர் ஆக்கிரமிப்பிலே இருப்பதாக ஆளுநர் கூறினாலும், கடந்த 10 ஆண்டு கால ஆட்சியிலும் அது இருந்தது. ஆனால் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, 50,000 ஏக்கரில் 4,000 ஏக்கர் அளவிற்கு மீட்டுள்ளோம்.

அதோடு மட்டுமல்லாமல், ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை, இது கோயிலுக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இப்படி கோயில் நிலங்கள் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மீட்கப்பட்ட சில இடங்கள் பாஜவினர் ஆக்கிரமிப்பில் வைத்திருந்திருந்தனர். அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டதற்கு ஆளுநர் நன்றி சொல்ல வேண்டுமென்றால், முதலில் தமிழக அரசுக்கு நன்றியை சொல்ல வேண்டுமே தவிர, இது போன்ற குறைகள் சொல்வதை அவர் தவிர்க்க வேண்டும்.

குழந்தை திருமணம் குறித்து 4 புகார்கள் பெறப்பட்டன அந்த புகார்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல் இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை. சட்டமீறல், விதிமீறல் நடந்தால் அது சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அந்த சட்டம் அவர்கள் மீது பாய கூடாதா? சிதம்பர தீட்சிதர்கள் என்றால் அவர்களுக்கென்று ஏதாவது ஆளுநர் சட்டம் வகுத்து தந்திருக்கின்றாரா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆகவே விதிமீறல்கள், சட்டமீறல்கள் எங்கிருந்தாலும் அதில் உடனடியாக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய தமிழ்நாடு முதல்வர் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

ஆளுநர் என்றால் ஆண்டவரா? தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி. அண்ணா சொன்னது போல் ஆட்டுக்கு தாடி தேவையில்லை, தமிழ்நாட்டுக்கும் ஒட்டுமொத்த ஒன்றியத்துக்கும் ஆளுநரும் தேவை இல்லை என்பதுதான் திமுகவின் கொள்கை. ஆகவே நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்திற்காக இப்படிப்பட்ட இல்லாத குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஆளுநர் என்ன ஆண்டவரா? அமைச்சர் சேகர் பாபு சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: