ரூ.3.56 கோடியில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட 36,600 ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் முழு உடல் பரிசோதனை திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் அறிவிப்பை செயல்படுத்த வசதியாக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் பேரில், பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் 37,588 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களின் வயது அடிப்படையை பொறுத்தவரையில், 1,06,985 ஆசிரியர்கள் 50 வயதுக்கு மேலும், 73,349 பேர் 40-50 வயதிலும், 43,701 பேர் 40 வயதுக்கு கீழும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை முதற்கட்டமாக அனுமதி அளித்து கடந்த மாதம் 13ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின்படி, முழு ரத்த வகைப்பாட்டு சோதனை, இஎஸ்ஆர், மூத்திர ஆய்வு, ரத்த சர்க்கரை பரிசோதனை, யூரியா, யூரிக் ஆசிட், கிரியேட்டினின் சோதனை, கொலஸ்ட்ரால், டிரைகிளிஸரைட்ஸ், கல்லீரல் பரிசோதனை, ரத்தத்தில் பித்தத்துகள்ளின் (பிலுருபின்) அளவு, முழுமையான புரதம் மற்றும் அல்புமின் சோதனை, ரத்த குரூப், இசிஜி, மார்பு எக்ஸ்ரே, ரத்தக் கொழுப்பின் அளவு, பெண்களுக்கான அடி வயிறு சோதனை, கருப்பை வாய் புற்று சோதனை ஆகிய பரிசோதனைகள் செய்யவும் அனுமதிக்கப்பட்டது. முதற்கட்டமாக 36,600 ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு கோல்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆசிரியருக்கு ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.3 கோடியே 56 லட்சம் தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து செலவிடவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

The post ரூ.3.56 கோடியில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: