பூந்தமல்லி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பூந்தமல்லி நகர திமுக சார்பில் நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை தலைமையில் கொண்டாடப்பட்டது. பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட நிர்வாகிகள் காயத்ரி தர், லயன் சுதாகர் முன்னிலை வகித்தனர். பூந்தமல்லியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
பூந்தமல்லி பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி நாசர் எம்எல்ஏ, பூந்தமல்லி கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை உணவு பரிமாறினர். பின்னர் பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பூந்தமல்லி அரசு மகப்பேறு மருத்துவ மனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், பிறந்த குழந்தைகளுக்கான பரிசுப் பெட்டகத்தையும் வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சியில், பூந்தமல்லி நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சி.என். கண்டிகை, கொல்லாலகுப்பம் கிராமங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சி.ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் திருமலை லோகநாதன், பள்ளிப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.மணிமேகலை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஜெ.தண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் எஸ்.கே.சேகர், பள்ளிப்பட்டு பேரூராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் த.ஜெகதீசன், சி.என்.கண்டிகை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் appeared first on Dinakaran.