ஒரே ஒரு மாணவியும் வேறு பள்ளிக்கு சென்றதால் 61 ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு பள்ளி தற்காலிகமாக மூடல்

*கல்வித்துறை நடவடிக்கை

ஊட்டி : பள்ளியில் பயின்று வந்த ஒரே ஒரு மாணவியும், மாற்று சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு சென்று சேர்ந்ததால் கடந்த 61 ஆண்டுகளாக இயங்கி வந்த ஊட்டி அருகே பார்சன்ஸ்வேலி அரசு தொடக்க பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. நீர்மின் உற்பத்திக்கு தண்ணீரை தேக்கி வைப்பதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பார்சன்ஸ்வேலி பகுதியில் கடந்த 1961-66 வரையிலான காலகட்டத்தில் அணை கட்டப்பட்டது.

இந்த அணை கட்டுமான பணிக்காக அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
அணை கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி அளிக்கும் பொருட்டு பார்சன்ஸ்வேலி பகுதியில் கடந்த 1962ம் ஆண்டு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்க பள்ளி துவக்கப்பட்டது.

இப்பள்ளி துவக்கப்பட்ட சமயத்தில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்றனர். 7 ஆசிரியர்கள் இருந்தனர். அருகாமையில் உள்ள கவர்னர் சோலை மற்றும் தோடர் பழங்குடியின கிராமங்களை சேர்ந்த குழந்தைகளும் இங்கு பயின்று வந்தனர். காலபோக்கில் மின்வாரிய குடியிருப்புகளில் இருந்து அங்கு மின்வாரியத்தில் பணியாற்றியவர்கள் ஓய்வுபெற்றோ அல்லது பணியிட மாறுதல் பெற்று சென்றதால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைய துவங்கியது. தற்போது இப்பகுதியில் சுமார் 30க்கும் குறைவாக குடும்பங்களே வசித்து வருகின்றனர்.

கடந்த 2012ம் ஆண்டு 7 மாணவர்கள் படித்து வந்த போது, ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் இப்பள்ளி மூடப்படும் அபாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இங்கு பணியாற்றி வந்த சத்துணவு அமைப்பாளர் மாணவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துள்ளார். இதனால் மூடும் அபாயத்தில் இருந்து தப்பிய இப்பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்கப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக மாணவர் எண்ணிக்கை 10 என்ற அளவிலேயே இருந்து வந்தது. தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடைசியாக கடந்த 2021-22ம் கல்வியாண்டில் 4 பேர் பயின்று வந்தனர்.

அவர்களும் தேர்ச்சி பெற்று உயர்வகுப்புகளுக்கு சென்ற நிலையில், 2022-23ம் கல்வியாண்டில் மாணவி ஒருவர் மட்டும் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். அதன்பின், மாணவர் சேர்க்கை இல்லாத நிலையில் கடந்த ஒராண்டாக அவர் மட்டும் படித்து வந்தார். தலைமையாசிரியர் ஒருவர் மட்டும் வகுப்பு நடத்தினார்.

ஒரே ஒருவராக படித்து வந்த அந்த மாணவி தேர்ச்சி பெற்று இரண்டாம் வகுப்பிற்கு சென்றார். இருந்த போதும் ஒருவர் மட்டுமே படிப்பதால், வேறு பள்ளிக்கு சென்று பயில விருப்பம் தெரிவித்து நடப்பு கல்வியாண்டில் மாற்று சான்றிதழ் பெற்று ஆடாசோலை பகுதியில் உள்ள வேறு பள்ளியில் சேர்ந்தார். வேறு மாணவர்கள் யாரும் சேராத நிலையில் நடப்பு கல்வியாண்டில் பார்சன்ஸ்வேலி அரசு தொடக்க பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனை ெதாடர்ந்து இப்பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக இருந்த மேசை, நாற்காலிகள் வேறு பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்டன. பள்ளி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இருக்கும் பட்சத்தில் பள்ளி மீண்டும் திறக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கடநாடு பகுதியில் உள்ள தொடக்க பள்ளியிலும் ஒரே மாணவர் இருந்த நிலையில், அவரும் வேறு பள்ளிக்கு சென்றதால் அப்பள்ளியும் தற்காலிகமாக மூடப்பட்டது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,“பார்சன்ஸ்வேலி பள்ளி கடந்த 1962ல் துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிக குழந்தைகள் கல்வி கற்ற நிலையில், தற்போது படிப்படியாக மாணவர் எண்ணிக்கை குறைந்து நடப்பு கல்வியாண்டில் மாணவர்களே இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், தற்காலிகமாக மூடப்பட்டது. வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை இருந்தால் மீண்டும் திறக்கப்படும்’’ என்றனர்.

அடர்ந்த வனத்தின் நடுவே அணை கட்டுமான பணிக்கு வந்த தொழிலாளர்களின் குழந்தைக்கு கல்வி அளிக்க துவக்கப்பட்டு கடந்த 61 ஆண்டுகளாக கல்வியளித்து வந்த பள்ளி, தற்போது முற்றிலும் மாணவர் சேர்க்கையில்லாததால் மூடப்பட்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* கடந்த 2012ம் ஆண்டு 7 மாணவர்கள் படித்து வந்த போது, ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் இப்பள்ளி மூடப்படும் அபாயம் ஏற்பட்டது.

* தற்போது இப்பகுதியில் சுமார் 30க்கும் குறைவாக குடும்பங்களே வசித்து வருகின்றனர்.

* குழந்தைகள் கல்வி கற்ற நிலையில், தற்போது படிப்படியாக மாணவர் எண்ணிக்கை குறைந்து நடப்பு கல்வியாண்டில் மாணவர்களே இல்லாத நிலை ஏற்பட்டது.

The post ஒரே ஒரு மாணவியும் வேறு பள்ளிக்கு சென்றதால் 61 ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு பள்ளி தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.

Related Stories: