×

அரசு பள்ளிகளில் 1,588 மாணவர்கள் சேர்க்கை

 

ஈரோடு, மே 18: ஈரோடு கல்வி மாவட்டத்தில் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 1,588 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதில் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, எல்.கே.ஜி. முதல் 9ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பாடங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை சதவீதத்தை உயர்த்திட அறிவுறுத்தியது.

அதன்பேரில், அந்தந்த அரசு பள்ளிகள் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதிகளில் தலைமையாசிரியர், ஆசிரியை, ஆசிரியர்கள், அவர்களது பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் படிப்பதால் மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கும் அரசின் சலுகை மற்றும் இட ஒதுக்கீடு குறித்து, முதல்வரின் காலை உணவு திட்டம் போன்றவற்றை எடுத்துக்கூறியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சேர்க்கை பெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், ஈரோடு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, அம்மாபேட்டை ஆகிய 7 ஒன்றியத்தில் உள்ள 505 தொடக்கப்பள்ளிகள், 138 நடுநிலைப்பள்ளிகளில் தற்போது வரை 1,588 மாணவ-மாணவிகள் புதிதாக சேர்க்கை பெற்றுள்ளனர். இதில், 85 சதவீதம் நுழைவு நிலை வகுப்பான 1ம் வகுப்பில் புதிதாக சேர்ந்துள்ளதாக ஈரோடு தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா தெரிவித்துள்ளார்.

The post அரசு பள்ளிகளில் 1,588 மாணவர்கள் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Education District ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...