அரசு அலுவலகங்களுக்கு பில் புத்தகம் வாங்கியதில் முறைகேடு புகார்: அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் அதிமுக பிரமுகராக இருந்தார். இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் உள்ளாட்சி துறையில் இருக்கும் பொழுது வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

அப்போதைய காலகட்டத்தில் பல்வேறு ஒப்பந்தங்களில் ஊரக வளர்ச்சித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தளவாட பொருட்கள், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட அரசு ஒப்பந்தங்களை எடுத்துள்ளார். குறிப்பாக 2018-19 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் பிளீச்சிங் பவுடர், பில் புக் உள்ளிட்ட தளவாட பொருட்களை விநியோகம் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக அன்றைய மாவட்ட ஆட்சியர் மலர்விழி, ஒன்றிய ஆணையர்கள் 10 பேர் மற்றும் ஒப்பந்ததாரர் பழனிவேல் உள்ளிட்டோர் மீது முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று அந்த வழக்கின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வரக்கூடிய நிலையில் அதிமுக பிரமுகரான அரசு ஒப்பந்ததாரர் பழனிவேலின் சொந்தமான வீடு உள்ளிட்ட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவிலேயே எது மாதிரியான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பதும் தெரியவரும். ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு இவருடைய சகோதரரான முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

The post அரசு அலுவலகங்களுக்கு பில் புத்தகம் வாங்கியதில் முறைகேடு புகார்: அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: