×

தடைவலை மீன்பிடிப்பால் அழிந்து வரும் மீன்வளம்

*வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

*கடுமையான சட்டம் வேண்டும்

தொண்டி : தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்றுவட்டாரத்தில் நாட்டு படகு மீனவர்கள் இரட்டைமடி மற்றும் சுறுக்கு மடியால் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கடல் தொழில் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் உள்ளது. உணவுக்காக கடல் மீன்களை கரை ஓரங்களில் பிடித்த மனிதன் கால போக்கில் மரம், கட்டை உள்ளிட்டவைகளின் உதவியுடன் சற்று ஆழத்திற்கு சென்றான். நாகரீக வளர்ச்சி காரணமாக படகு, கப்பல் மூலம் கடல் கடந்து வணிகத்திலும் ஈடுபட்டான்.

பண்டைய வரலாற்று நூல்களில் தமிழன் பல்வேறு நாடுகளுடன் கடல் வழி வணிக தொடர்பு வைத்ததற்கான ஆதாரங்கள் அதிகம் உண்டு. உள்ளுரில் உணவிற்காக மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், இதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொண்டனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும்.

தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. முற்றிலும் கடல் பகுதியான இங்கு துறைமுகம் அமைக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. காரங்காடு, முள்ளிமுனை, சோலியக்குடி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் உள்ளது. நீண்ட தூரம் சென்று மீன் பிடிக்க முடியாததால் பெரும்பாலும் கரை ஓரங்களில் மட்டுமே மீன் பிடிப்பார்கள். இதனால் போதிய வருமானம் இல்லாமல் வாழ்வை நகர்த்தி வருகின்றனர்.

விசைப்படகு மீனவர்கள் இரட்டைமடி, அரிப்பு வலை, சுருக்கு மடி உள்ளிட்ட முறைகள் மூலம் மீன் பிடிக்கப்படுவதால் மீன் குஞ்சுகள் முதல் பிடித்து விடுகின்றனர். இதனால் கரை ஒரங்களில் மீன் பிடிக்கும் நாட்டு படகு மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. விசை படகு மீனவர்களுக்கு திங்கள், புதன், சனி கிழமையும் நாட்டு படகு மீனவர்களுக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி கிழமைகளிலும் மீன் பிடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கந்து வட்டிக்காரர்களில் அதிக வட்டிக்கு கடனை வாங்கி போதிய வருமானம் இல்லாமல் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் எத்தனையே மீனவர்கள் கஷ்டப்படுகின்றனர். சிலர் கடனை அடைக்க தங்கள் குழந்தைகளையும் கடலுக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் குழந்தைகளின் படிப்பும் பாதியில் நின்று விடுகிறது. இடை நிறுத்திய மாணவர்கள் இப்பகுதியில் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதிலையே தொழிக்கு செல்வதால் விரைவில் போதைக்கும் அடிமையாகி விடுகின்றனர்.

நாட்டுப் படகு மீனவர் ஆறுமுகம் கூறியது, ‘‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். நாங்கள் எங்கள் வாழ்விற்க்காக கடலுக்கு செல்கிறோம். உயிரை பணயம் வைத்து இரவு நேரத்தில் எந்த வெளிச்சமும் இல்லாமல் வலையை விரித்து வைத்து காத்திருப்போம். சில நேரம் நல்ல பாடு வரும். சில நாள் டீசலுக்கு கூட வழி இருக்காது. பைபர் படகு மற்றும் வல்லம் மூலம் செல்வதால் அதிக தூரம் செல்ல முடியாது, கிடைப்பதை வைத்து வாழ்வை நகர்த்துகிறோம்.

மேலும் இரட்டை மடி, சுறுக்கு மடி மூலம் மீன்பிடிப்பதால் மீன் வளம் முற்றிலும் அழிந்து வருகிறது. உதாரணமாக வாளை மீன் கடந்த காலங்களில் டன் கணக்கில் வலையில் சிக்கும். தற்போது ஒன்று கூட சிக்குவது கிடையாது. இதனால் வாளை மீன் இனம் அழிந்து வருகிறதா என்று சந்தேகமாக உள்ளது. குஞ்சு மீன் முதல் பிடித்துச் சென்றால் எவ்வாறு நாட்டு படகு மீனவர்கள் வாழ்வு வளம் பெரும். கடுமையான சட்டங்கள் மூலம் மீன்பிடி முறையை ஒழுங்கு படுத்தி நாட்டு படகு மீனவர்களை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

அக்.23ல் காத்திருப்பு போராட்டம்

கீழக்கரை அருகே சின்ன ஏர்வாடி மீனவ கிராமத்தில் நாட்டுப்படகு, சிறுதொழில் மீனவர்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் முருகராஜ் தலைமை வகித்தார். சிஐடிடி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிவாஜி, கடல் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் நாட்டுப்படகு, சிறு தொழில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும்.

கடல் வளம், மீன்வளத்தை முற்றிலும் அழிக்கும் சுருக்குமடி மீன்பிடி முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடியில் காஸ் சிலிண்டர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். கரையில் இருந்து 5 நாட்டிகல் தொலைவிற்குள் மீன் பிடிக்கும் தூத்துக்குடி, மூக்கையூர், கீழக்கரை பகுதி விசைப்படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

மண்டபம் முதல் எஸ்பி பட்டனம் வரை கடற்கரை கிராமங்கள், ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் மீனவர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன் அக்.23ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

The post தடைவலை மீன்பிடிப்பால் அழிந்து வரும் மீன்வளம் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Thondi, Nambuthalai ,
× RELATED வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைக்கும் பணி துவக்கம்