×

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வறையில் கழிவறை புதுப்பிக்கப்படுமா?: தொற்று நோய் பரவும் அபாயம் – பயணிகளுக்கும் ஆபத்து

நாகர்கோவில்: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான ஓய்வறையில் கழிவறைகளை புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம், ரோஸ்மியாபுரம் உள்ளிட்ட நெல்லை மாவட்ட பகுதிகளுக்கு பஸ்கள் செல்கின்றன. கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், ராணித்தோட்டம் 1, 2, 3, செட்டிக்குளம் உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. நாள் தோறும் குறைந்த பட்சம் 500 க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் சுழற்சி முறையில் வந்து செல்கிறார்கள். இவர்கள் தங்குவதற்காக மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் கட்டிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்துக்கு மாநகராட்சி சார்பில் வந்த வித வாடகையும் வசூலிக்கப்பட வில்லை. போக்குவரத்து கழகத்துக்காக கட்டிடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டிடத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் அமருவதற்காக இருக்கை வசதிகள், அவர்களின் உடமைகள் வைப்பதற்கான வசதிகள் மற்றும் குடிநீர், கழிவறை வசதிகளை போக்குவரத்து கழக நிர்வாகம் தான் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் இந்த கட்டிடத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கூட டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இல்லை.

குறிப்பாக கழிவறைகள் சுத்தம் செய்யப்படுவது கிடையாது. அவ்வப்போது டிரைவர்கள், கண்டக்டர்கள் பணம் கொடுத்து, தூய்மை பணியாளரை வரவழைத்து சுத்தம் செய்யும் பணிகளை செய்வார்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில் கழிவறைகளில் கோபைகள் நிரம்பி அலங்கோலமாக கிடக்கும். இதனால் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தொற்று நோய்கள் உள்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. டிரைவர்கள், கண்டக்டர்கள் என்பதால் அவர்கள் பணியாற்றும் பஸ்களில் செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கும் தொற்று பரவி விடுகிறது. எனவே கழிவறையை புதுப்பித்து முறையாக சுத்தம் செய்து தர வேண்டும் என போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் போக்குவரத்து கழக நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை. மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்த போது, உங்கள் கட்டிடத்துக்கு எந்த வித வாடகையும் வசூலிப்பதில்லை.

மேலும் கழிவறைக்குள் மதுபாட்டில்கள், குப்பைகளை கொண்டு கோப்பைகளை நிரப்பி விடுகிறீர்கள். எப்படி சுத்தம் செய்து தர முடியும் என கை விரித்து விட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், கலெக்டர் அழகு மீனா திடீரென பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். கழிவறை பிரச்சினை தொடர்பாக அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிகாரிகளை கண்டித்த அவர், கழிவறையை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் வாங்கி பிளிச்சிங் பவுடர் மற்றும் சுத்தம் செய்வதற்கான பொருட்கள், வாளி, கப் வகைகளை வாங்கி வைத்துள்ளனர். ஆனால் உடைந்து கிடக்கும் கோப்பைகளை சரி செய்ய வழியில்லை. இதனால் மீண்டும் கழிவறை நிரம்பும் அபாயம் உள்ளது. எனவே முறையாக போக்குவரத்து கழக நிர்வாகம், மாநகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்து கழிவறையை புதுப்பித்து தர வேண்டும். மேலும் ஓய்வறையில் போதுமான இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என டிரைவர்கள், கண்டக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2.0 திட்டம் கை கொடுக்குமா?
தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட சமுதாய கழிப்பறைகள் மற்றும் பொது கழிப்பறைகள் சீரமைப்பதற்கான தமிழ்நாடு தலைமை செயலாளர் தலைமையில் நடந்த மாநில உயர்மட்டகுழு 8 வது குழு கூட்ட நடவடிக்கையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமுதாய கழிப்பறை ரூ.49.10 லட்சமும், பொது கழிப்பறை ரூ.57.90 லட்சமும் கழிப்பறைகள் சீரமைப்பதற்கு மொத்தம் ரூ1.07 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்ட நடவடிக்கையில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு பங்களிப்பு விகிதமாக ரூ.37.88 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சியில் உள்ள பழுடைந்த சமுதாய கழிப்பிடம் மற்றும் பொது கழிப்பிடங்கள் பராமரிப்பு பணிக்கு 23 மதிப்பீடுகள் ரூ.1 கோடி 15 லட்சத்து 70 ஆயிரத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 23 கழிப்பிடங்கள் ரூ.1 கோடி 15 லட்சத்து 70 ஆயிரத்தில் சீரமைக்க மாநகராட்சியால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2.0 திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் சீரமைப்பு திட்டத்தில், நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான கழிவறைகளையும் சீரமைத்து புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 2.0 திட்டத்தின் கீழ் செய்ய வழியில்லை. இதன் பராமரிப்பு பணியை போக்குவரத்து கழக நிர்வாகம் தான் செய்ய வேண்டும் என்றனர்.

The post நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வறையில் கழிவறை புதுப்பிக்கப்படுமா?: தொற்று நோய் பரவும் அபாயம் – பயணிகளுக்கும் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Anna Bus Station ,Nagercoil Anna Bus Station ,Valliyur ,Panagudi ,Vadakankulam ,Dinakaran ,
× RELATED நெசவாளர் காலனியில் சாலைப்பணி மேயர் தொடங்கி வைத்தார்