சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. சென்னையில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியும் பதவியை மீண்டும் கொண்டு வருவது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது போன்ற தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜெசிடி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது 7 நாட்கள் வாதம் நடந்து இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்குகள் மீதான தீர்ப்பு கடந்த ஜூன் 28ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளில் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.
The post பொதுக்குழு தீர்மானம், பொது செயலாளர் நியமனத்தை எதிர்த்து ஓ.பி.எஸ் – ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.