காஸ் சிலிண்டர்களை ஏற்றிசென்ற வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சமையல் எரிவாய்வு சிலிண்டர்களை ஏற்றிசென்ற மினி லோடு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் சிப்காட்டில் சூப்பர் காஸ் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு காஸ் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த குமார் (27). ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவர், நேற்று மினி லோடு வேனில் 50க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தண்டலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது. இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை பக்கவாட்டில் லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பின்புறம் இருந்த சிலிண்டர்கள், சாலையில் நாலாபுரமும் சிதறி, உருண்டு ஓடின.

விபத்தில் குமாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், சில சிலிண்டர்களில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டதால், பிற வாகன ஓட்டிகள் அச்சத்துக்குள்ளாகினர். இதுகுறித்து, இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள்.

சென்னை நோக்கி சென்ற அனைத்து வாகனங்களையும், சர்வீஸ் சாலையில் செல்ல அறிவுறுத்தனர். பிறகு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரை பீச்சி அடித்து சிலிண்டர்களை சாலை ஓரமாக அப்புறப்படுத்தினர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழல் காணப்பட்டது. மேலும், வாகனம் கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காஸ் சிலிண்டர்களை ஏற்றிசென்ற வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: