கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் புது வரலாறு படைக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் புதுவரலாறு படைக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கேலோ இந்தியா தொடக்க விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023ஐ துவக்கி வைக்க வந்திருக்கும் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். தமிழக அரசின் கனவு நனவான தருணம் இது. 6வது கேலோ இந்தியா போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது.

இந்நிகழ்வை நடத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவிகரமாக இருந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மாநில அளவிலும், இந்தியா அளவிலும், சர்வதேச அளவிலான போட்டிகளை வெற்றிகரமாக தமிழகத்தில் நடத்தி வருகிறோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழக அரசு நடத்திக்காட்டியது. அது எங்களது திறமைக்கான சான்றாக விளங்கி வருகிறது. அதையடுத்து, ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம்.

எப்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசில், அனைத்து துறைகளும் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில் செயல்பட்டு வருகிறதோ, அதே போலத்தான் விளையாட்டு துறையும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்தியாவில் கல்வி, மருத்துவம் என்றாலே தமிழ்நாட்டை தான் முதன்மை மாநிலமாக சொல்வார்கள். இன்றைக்கு விளையாட்டு துறை என்றாலும் தமிழ்நாடு முக்கியமான மாநிலம் என்கிற வகையில் உயர்ந்திருக்கிறது. பொதுவாக, விளையாட்டு போட்டி என்றால், வீரர்-வீராங்கனையர் மட்டும் தான் பங்கேற்பார்கள்.

ஆனால், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் நடத்தப்பட்டன. பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்களும் முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றார்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 76 பயிற்சியாளர்களை நியமித்துள்ளோம். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஏராளமான பரிசுத் தொகைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து நிதி பெற்று செல்கின்ற வீரர், வீராங்கனையர் பதக்கங்களை வென்று வாழ்த்து பெறுகின்றனர்.

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும், கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்டை வழங்க இருக்கிறோம். இத்தனை பெருமைகளுக்கு நடுவே தான், கேலோ இந்தியா போட்டிகளை நடத்த உள்ளோம். 6000 வீரர்கள், 25 விளையாட்டுகள் என கோலாகலமாக கேலோ இந்தியா போட்டிகள் நடைபெற உள்ளன. கேலோ இந்தியா கேம்ஸ் 2023 தமிழ்நாட்டில் புதுவரலாறு படைக்க உள்ளது என்பதில் மாற்று கருத்து கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

The post கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் புது வரலாறு படைக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: