×

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கி நிர்வாக அனுமதி வழங்கல்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் மறு வடிவமைப்பிற்கென தமிழ்நாடு அரசு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கியதுடன், நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விரைவில் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு, சீரமைப்பு பணிகள் துவங்க இருக்கிறது. மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த எம்ஜிஆர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பேருந்து நிலையத்தில் 8 பிளாட்பாரங்கள் உள்ளன. இந்த பிளாட்பாரங்கள் சீரமைப்புடன், பஸ்ஸ்டாண்டில் மேலும் வசதிகளுடன் கூடுதலாக அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென தமிழ்நாடு அரசு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கி, நிர்வாக அனுமதியும் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு, பணிகள் துவங்குகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் 2023 டிசம்பரில் ரூ.1.8 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. அதன்பிறகு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கி மறு வடிவமைப்புடன் கூடிய சீரமைப்பு பணிகள் தற்போது நடக்க இருக்கிறது. எந்த கட்டுமானத்தையும் இடித்து அகற்றாமல் அதேநேரம் 8 பிளாட்பாரங்களின் மேற்கூரைகள் சரிசெய்து, பஸ்பே எனப்படும் பேருந்துகளை நிறுத்தும் தரைப்பகுதி முழுவதும் சீரமைக்கப்படுகிறது. இத்துடன் ஒவ்வொரு பிளாட்பாரமும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அழகுடையதாக மாற்றப்படும்.

ேபருந்து நிலையத்திற்குள் முழுமையான சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், நுழைவிடங்களில் பிரமாண்ட வளைவுகள் துவங்கி பயணிகளுக்கான இருக்கைகள் வரை அனைத்து பணிகளும் மிக கவனமாக நடைபெற உள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகளில் சில மாற்றங்கள் செய்து கமிஷனர் சித்ரா விஜயன், தலைமை இன்ஜினியர் குழுவினர் மேற்பார்வையில் இப்பணிகள் நடக்கும். சீரமைப்பு பணிகள் நடக்கும்போது அருகாமையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது உள்ளிட்ட மாற்று வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் மறுவடிவமைப்பிற்கான சீரமைப்பு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும்’ என்றார்.

The post மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கி நிர்வாக அனுமதி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Madurai Cattle Bus ,Madurai ,Government of Tamil Nadu ,Madurai Beef Bus Stand ,MGR Bus ,Madurai Cattle ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்