தாம்பரம்: உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு இன்று (28ம் தேதி) தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இணைந்து செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் அவர்களது நாய்களுக்கு ஒவ்வொரு வருடமும் வெறிநோய் தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகும். எனவே, பொதுமக்களிடையே வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இந்த வருடம் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு முதற்கட்டமாக 250 நாய்களுக்கு தடுப்பூசி போட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி நேரடியாக இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு வார்டு பகுதியிலும் 200 நாய்கள் என 70 வார்டுகளிலும் 14,000 தெருநாய்களுக்கு தடுப்பூசி போடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று பெருங்களத்தூர் பகுதியில் உள்ள 4வது மண்டல அலுவலகம் அருகில் காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடத்தட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பயன் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தாம்பரம் மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்: பெருங்களத்தூரில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.