மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்..!!

சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் லிப்ரா புரொடக்சன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரக்கூடிய ரவீந்தர் சந்திரசேகர், ரூ.16 கோடி தன்னிடம் மோசடி செய்ததாக கூறி, சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில், நகராட்சி திட்ட கழிவுகளை ஆற்றலாக மாற்றக்கூடிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகளை கூறி தன்னை முதலீடு செய்ய வைத்து பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த செப்டம்பர் 7ல் சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவீந்தர் சந்திரசேகர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது புகார் தாரருக்கு 2 கோடி ரூபாய் திருப்பி கொடுத்திருப்பதாக ரவீந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சரி பார்த்து அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவீந்தரின் வங்கி கணக்கில் இருந்து பல பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. ஆனால் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்த வழக்கு தொடர்புடையதா என தெரியவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பண பரிவர்த்தனை தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டுமே தெரியவரும் என்று குறிப்பிட்ட நீதிபதி, 2 வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரவீந்தர் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: