குளித்துக் கொண்டிருந்தவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டி பிஆர்எஸ் கட்சி வாக்கு சேகரிப்பு

திருமலை: தெலங்கானாவில் குளித்து கொண்டிருந்தவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டி பிஆர்எஸ் கட்சியினர் வாக்கு சேகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் இந்த மாதம் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, யாதாத்ரி புவனகிரி மாவட்டம் துர்கப்பள்ளி மண்டலம் ராம்பூர் தாண்டாவில் ஆலேரு தொகுதி ஆளும் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அக்கட்சியினர் நேற்று முன்தினம் வாக்கு சேகரித்தனர். அப்போது ஒருவர் குளித்துக் கொண்டிருக்கும்போது அங்கு சென்று அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டி உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். வழக்கமாக டீ போடுவது, வடை சுடுவது, பானை செய்வது என பிரசாரம் செய்த நிலையில் குளித்துக் கொண்டிருந்தவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குளித்துக் கொண்டிருந்தவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டி பிஆர்எஸ் கட்சி வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: