வெளிநாடு யோகம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

நாற்பது, ஐம்பது வருடத்திற்கு முன்பு நகரத்திற்கு வருவதையே கிராமத்தில் ‘பட்டணத்திற்கு போறாங்க…’ என அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் பேசுவார்கள். அப்பொழுது போக்குவரத்திற்கான வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. அதனால் நகரத்திற்கு அரிதான சிலர் மட்டுமே வருவர். அதிலும் உத்யோகத்திற்காகவும் மேற்படிப்பிற்காகவும் மட்டுமே வருவர். அக்கால கட்டத்தில் வெளிநாடு செல்வது மிகவும் அரிதாக பார்க்கப்பட்டது. அவ்வாறு வெளிநாடு செல்வோர் நாட்டிற்கு திரும்பமாட்டார்கள் என்ற அச்சம் இருந்தது. ஜோதிட ரீதியாக யாரெல்லாம் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை பார்க்கலாம்.

ஜோதிடத்தில் வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு?

* தொலைதூரப் பயணம் மற்றும் கடல் கடந்த பயணம் அல்லது பிறந்த ஊரைவிட்டுப் பயணம் என்பதெல்லாம் ஜோதிடத்தில் பன்னிரெண்டாம் (12ம்) பாவத்தையும் எட்டாம் (8ம்) பாவத்தையும் குறிப்பிடும்.

* பன்னிரெண்டாம் (12ம்) பாவதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெறுவது.

* பன்னிரெண்டாம் (12ம்) பாவத்திற்கு ஒன்பதாம் (9ம்) பாவமாகிய எட்டாம் (8ம்) பாவத்தோடு தொடர்புடன் இருப்பது.

* பன்னிரெண்டாம் (12ம்) பாவாதிபதியும், எட்டாம் (8ம்) பாவாதிபதியும் ஒன்றோடொன்று சப்தமாக பார்த்து இணைந்திருப்பது வெளிநாடு யோகத்தை குறிக்கும்.

* பன்னிரெண்டாம் (12ம்) பாவத்தையும் எட்டாம் (8ம்) பாவத்தையும் சுபகிரகங்கள் பார்வை செய்வது.

* நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஒரு கிரகமாவது இருக்க வேண்டும்.

* நீர் கிரகமான சந்திரன், நீர் ராசியில் இருப்பதும் நீர் ராசிகளை பார்வை செய்வதும் இருக்க வேண்டும். இவ்வாறு ஜாதகத்தில் அமைப்புள்ளவர்களுக்கு வெளிநாடு யோகம் உண்டு என உறுதி செய்து கொள்ளலாம்.

* சிலரின் ஜாதகத்தில ஒன்பதாம் அதிபதி (9ம்) பன்னிரெண்டாம் (12ம்) பாவத்தில் அமர்ந்து நீர் ராசியில், நீர் கிரகம் அமர்ந்து பார்வை செய்யும் போது இருக்குமாயின் ஆன்மிக சுற்றுலாவாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

யார் வெளிநாடு சென்று உத்யோகம் செய்வார்கள்?

எட்டாம் (8ம்) பாவாதிபதி, பத்தாம் (10ம்) பாவாதிபதி, ஆறாம் (6ம்) பாவாதிபதி மற்றும் பன்னிரெண்டாம் (12ம்) அதிபதிகள் இணைந்து பன்னிரெண்டாம் (12ம்) பாவத்திலோ இருந்தால் வெளிநாட்டில் உத்யோகம் செய்வார். இந்த கிரகங்கள் சுபகிரகங்களின் பார்வையில் இருந்தால் இன்னும் சிறப்பான பலன்கள் உண்டு.

யார் வெளிநாட்டிற்கு மேற்படிப்பிற்காக செல்வார்கள்?

எட்டாம் (8ம்) பாவாதிபதி, ஐந்தாம் (5ம்) பாவாதிபதி மற்றும் பன்னிரெண்டாம் (12ம்) அதிபதிகள் இணைந்து பன்னிரெண்டாம் (12ம்) பாவத்திலோ இருந்தால் வெளிநாட்டில் மேற்படிப்பிற்காக செல்வார்கள். சிலருக்கு ஐந்து கிரகங்கள் முறையே நான்காம் அதிபதி (4ம்), ஐந்தாம் அதிபதி (5ம்), எட்டாம் அதிபதி (8ம்), பத்தாம் அதிபதி (10ம்) ஆகியவை பன்னிரெண்டாம் (12ம்) அதிபதியுடன் இணைந்து பன்னிரெண்டாம் (12ம்) பாவத்தில் இருந்து லக்னாதிபதியும் பன்னிரெண்டில்(12ல்) இருந்தால், படித்து வெளிநாட்டிலேயே உத்யோகம் செய்து வெளிநாட்டிலேயே குடியுரிமை பெறும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு விமானியாக பணியாற்றும் யோகம் உண்டாகும். இதற்கு சனி வலுத்திருக்கும் பன்னிரெண்டாம் அல்லது எட்டாம் பாவத்துடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கும்.

வெளிநாடு செல்லும் யோகம் எப்போது உண்டாகும்?

பன்னிரெண்டாம் தசாவில் நீர் ராசிகளின் புத்தியிலோ பன்னிரெண்டாம் (12ம்) அதிபதியின் தசாவில் எட்டாம் அதிபதியின் புத்தி அந்தரத்திலோ வெளிநாட்டுப் பயணம் நடைபெறலாம். சிலருக்கு 12-ம் அதிபதியின் தசாவில் வெளிநாடு செல்லும் எண்ணம் உண்டாகும். அதற்கான புத்தி அந்தரங்கள் கூடுதலாக இணைந்து செயல்படாத தருணத்தில் வெளிநாடு செல்ல முயற்சித்துக் கொண்டே இருப்பார். ஆனால், 12ம் அதிபதி ஜாதகரின் மனதில் வெளிநாடு செல்லும் அல்லது பரதேசம் செல்லும் எண்ணத்தை ஏற்படுத்துவார் என்பதை மறக்க வேண்டாம்.

வெளிநாடு செல்பவர்களுக்கான குறிப்பிட்ட பிரச்னை

பன்னிரெண்டாம் அதிபதி (12ம்), எட்டாம் அதிபதி (8ம்), ஆறாம் அதிபதி (6ம்) ஆகியவை இணைந்து பன்னிரெண்டாம் பாவத்தில் அமர்ந்து ஒரு வெளிநாடு யோகத்தினையோ வெளிநாடு உத்யோகத்தினையோ கொடுத்தாலும் அங்கு இந்த கிரகங்களுக்கு இடையே ஒரு போட்டி நடைபெறும். அது யுத்தமாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம். ஆதலால் அந்த பாவத்தின் மற்றொரு பணி மனிதனின் தூக்கம் ஆகும். இந்த தூக்கத்தினை கிரக யுத்தத்தினால் கிரகங்கள் கெடுக்கும் செயலை செய்யும். ஆதலால், அவர்களுக்கு ஜெட்லாக் (Jet Lag) எனச் சொல்லக்கூடிய உடலின் நேரத்தினை ஒழுங்கு செய்யும் ஒரு பிரச்னை ஏற்படும். இது நீண்டகாலமாக இருந்தால் பிரச்னைகள் உண்டாகும்.

வெளிநாடு செல்வதற்கான பரிகாரம் உண்டா?

பன்னிரெண்டாம் (12ம்) அதிபதியின் தேவதையினை அதற்குரிய கிழமைகளிலும் ஓரைகளிலும் அந்த தேவதைக்கு தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்தால் கண்டிப்பாக அதற்கான பலன்கள் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

The post வெளிநாடு யோகம் appeared first on Dinakaran.

Related Stories: