பொன்னேரி நகராட்சியில் குப்பைகளை எரித்தால் ரூ.5000 அபராதம்: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில், குப்பைகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள், ஒட்டல்கள், நடைபாதை கடைகள், 10 திருமண மண்டபங்கள், 3 திரையரங்குகள் உள்ளன. தினந்தோறும் சுமார் 5 டன்னிற்கு மேல் குப்பை கழிவுகளை சேகரித்து நகராட்சி நிர்வாகம் சார்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட, கடைகள் வணிக நிறுவனங்கள் திரையரங்குகள் திருமண மண்டப உரிமையாளர்களிடையே திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம், நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேலாண்மை விதிகள் 2016ன் படி நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், உணவகங்கள், திரையரங்குகள் திருமண மண்டபங்கள் மற்றும் மால்கள் போன்றவற்றில் தினந்தோறும் 100 கிலோவுக்கு அதிகமான கழிவுகளை உற்பத்தி செய்பவர் மற்றும் 5000 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிட வளாகம் கொண்டவர்களும் மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தங்களிடம் உருவாகும் கழிவுகளை மக்கும், மக்காத குப்பைகள் மற்றும் அபாயகரமான கழிவுகளாக தரம் பிரிக்க வேண்டும். இதில் மக்கும் கழிவுகளை அவர்களது வளாகத்திலேயே உரமாகவோ அல்லது மாற்று எரிபொருள் சக்தியாகவும் மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் 100 கிலோவுக்கு மேல் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளை நகராட்சி நிர்வாகம் கையாளுவதற்கு மாதம் ரூ.2000 வீதம் செலுத்த வேண்டும் கழிவுகளை கையாளுவதற்கு நகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும். கழிவுகளை வெளியில் கொட்டினாலோ தீயிட்டாலோ, ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

The post பொன்னேரி நகராட்சியில் குப்பைகளை எரித்தால் ரூ.5000 அபராதம்: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: