விவசாய நிலங்களுக்குள் புகும் வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு கம்பி வைத்த தொழிலாளிக்கு அபராதம்

*ஊட்டி அருகே பரபரப்பு

ஊட்டி : ஊட்டி அருகே முள்ளிக்கொரை பகுதியில் விவசாய நிலத்திற்குள் புகும் வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு கம்பிகள் வைத்த வடமாநில தொழிலாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி வனக்கோட்டம், ஊட்டி தெற்கு வனச்சரகம், ரீஸ் கார்னர் பிரிவு, கேர்ன்ஹில் காவல் பகுதிக்கு உட்பட்ட முத்தோரை அருகே முள்ளிக்கொரை பகுதியில் தனியார் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலம் வனத்தை ஒட்டி அமைத்துள்ளது.

இந்த வனத்தில் ஊட்டி தெற்கு வனச்சரக பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வனத்தை ஒட்டி விவசாய தோட்டத்தின் வேலி ஓரத்தில் சுருக்கு கம்பி இருந்ததை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தனியார் விவசாய நிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கலோராம் ராத்ரே (30) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வனத்தில் இருந்து தோட்டத்திற்குள் புகுந்த காட்டு பன்றி, முயல், காட்டாடு உள்ளிட்ட வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தியதாகவும், காட்டு விலங்குகள் வருவதை தடுக்கும் பொருட்டு அவற்றை வேட்டையாடுவதற்காக சுருக்கு கம்பிகள் வைத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட விவசாய நிலத்தின் உரிமையாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டு, சுருக்கு கம்பி வைத்து வன விலங்குகளை வேட்டையாடுவது வனச்சட்டத்தின்படி குற்றமாகும்.

இதுபோன்ற செயல்களில் தொழிலாளர்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். இதைத்தொடர்ந்து, வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு கம்பி வைத்த குற்றத்திற்காக மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post விவசாய நிலங்களுக்குள் புகும் வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு கம்பி வைத்த தொழிலாளிக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: