சென்னை, மதுரை மாவட்டத்தில் செப்டம்பரில் கருத்தரிப்பு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை எழும்பூர் மற்றும் மதுரையில் அரசு சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில், கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் -2022 பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5.89கோடி மதிப்பில் பெற்றோர் காத்திருப்பு அறை மற்றும் உணவகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் தங்களுடைய குழந்தைகளை அனுமதிக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் பெற்றோர் தங்க வசதியில்லை. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கலைஞர் நினைவு பன்னாட்டு மாராத்தான் போட்டியில் கலந்து கொள்ள 43,231 பேர்கள் பதிவு கட்டணமாக தலா ரூ.300 செலுத்தியிருந்தார்கள். செலுத்தியவர்களின் பதிவு கட்டணத்தில் சேவை வரி போக ரூ.1,22,02,450 முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பதிவு கட்டணத்தை பயன்படுத்தி எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் காத்திருப்பு அறை, உணவு வழங்கும் அறை போன்ற பல்வேறு வசதிகளை, நமக்கு நாமே என்ற திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யலாம்.

இன்றைக்கு ரூ.5.89 கோடி செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்படவிருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் ரூ.60 லட்சம் செலவில் பார்வையாளர்களுக்காக கழிப்பறை, சமையலறை மற்றும் தாய் பால் வங்கி அமைப்பதற்கு தங்களது பங்கை வழங்கியிருக்கிறார்கள். மேலும் சோதனை அடிப்படையில் சென்னை எழும்பூரிலும் மற்றும் மதுரையிலும் அரசு சார்பில் கருத்தரிப்பு மையங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அரசாணை மிக விரைவில் வர உள்ளது. ஆகஸ்ட் மாதம் இறுதியில் பணிகள் முடிவடைந்து செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மற்றும் இரண்டாம் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை, மதுரை மாவட்டத்தில் செப்டம்பரில் கருத்தரிப்பு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: