அச்சத்தில் அதிமுக

கடந்த 2011 – 21 வரை நடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக பணியாற்றியவர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, 2016 – 21ல் அமைச்சர்களாக இருந்தவர்கள் கோடிக்கணக்கில் சொத்துகள் சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் அதிமுகவின் முக்கிய புள்ளிகளான முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி, வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

தற்போது அடுத்தக்கட்டமாக அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றிய காமராஜ், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக காமராஜ் சொத்து சேர்த்துள்ளதாக, 810 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக மாஜி அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மீது ரூ.35.79 கோடி, கே.பி.அன்பழகன் மீது ரூ.45.20 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் மேல் நடவடிக்கைகளுக்கு உரிய விசாரணை நடத்துவதற்கு அனுமதி தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட காலமாக இழுத்தடித்து வருகிறார். இதுதொடர்பான விசாரணைக்காக அனுமதி கோரும் சிபிஐயின் கோரிக்கை, தமிழக அரசு சார்பில் ஆளுநர் அலுவலகத்திற்கு கடந்த 12.9.2022 அன்று அனுப்பப்பட்டது.

இந்த கடிதத்திற்கு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் இதுவரை, தமிழக அரசுக்கு கிடைக்கப் பெறவில்லை. முன்னாள் அமைச்சர் வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதும் நீதிமன்ற விசாரணையை தொடங்க அனுமதி கோரி, அனுப்பிய கடிதங்களையும் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். இதன்மூலம் அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளை மேலும் தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஆளுநர் இறங்கியுள்ளாரோ என எண்ணத்தோன்றுகிறது.இது ஒருபுறமிருக்க, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையும் சூடுபிடித்து வருகிறது.

இந்த பங்களாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கியிருந்த அறைகளில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கில் பறிமுதல் செய்த 8 செல்போன்களை விசாரணைக்காக தங்களிடம் வழங்க வேண்டுமென சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பல முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியின்போது துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அறிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. ஊழல், சொத்துக்குவிப்பு புகார், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மற்றும் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரம் என அடுத்தடுத்து அதிமுகவின் முக்கியப்புள்ளிகளை பிரச்னை மையம் கொண்டுள்ளது. விசாரணை மேலும் தீவிரமடையும்பட்சத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அச்சத்தால் அதிமுக மாஜி அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

The post அச்சத்தில் அதிமுக appeared first on Dinakaran.

Related Stories: