கட்டிட வரைபட அனுமதிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கட்டிட வரைபட அனுமதிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நகர் ஊரமைப்பு துறையினரால் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படும் மனைப் பிரிவுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரால் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரால் கடந்த மாதம் 12ம் தேதி வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதுதவிர கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உரிய காரணமின்றி கட்டிட வரைபட அனுமதி வழங்க கையூட்டு பெற்றால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன்படி நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், கட்டிட வரைபட அனுமதிக்கு விண்ணப்பம் செய்யும் பொதுமக்கள், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் கையூட்டு கோரும் நபர்கள் மற்றும் ஊராட்சியின் விவரங்களை 044-27427412 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post கட்டிட வரைபட அனுமதிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: