×

மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் கைதான மிளகாய்பொடி வெங்கடேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது: 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை

சென்னை: மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் என்ற மிளகாய் பொடி வெங்கடேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்தவர் மிளகாய்ப்பொடி வெங்கடேஷ் என்ற கே.ஆர்.வெங்கடேஷ். இவர், பாஜ ஓபிசி அணியின் மாநில செயலாளராக பதவி வகித்து வந்தார். ஆவடி காவல் ஆணையகரத்திற்குட்பட்ட, செங்குன்றம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கே.ஆர்.வெங்கடேஷ் மீது, ஆவடி காவல் ஆணையகரத்தில் 5 வழக்குகளும், ஆந்திர மாநிலத்தில் 49 வழக்குகளும் உள்ளன.

கடந்த 8ம் தேதி மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேஷ் சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. மேலும், அமித்ஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர் காவல் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பல அதிகாரிகளை அதில் டேக் செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் எலட்ரிக்கல்ஸ் கடைக்கு வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், செங்குன்றம் போலீசாரால் கடந்த 13ம் தேதி இவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து மிளகாய்ப்பொடி வெங்கடேஷை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நீக்கி உத்தரவிட்டிருந்தார். புலன் விசாரணையின் தொடர்ச்சியாக மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய மிளகாய்ப்பொடி வெங்கடேஷ் மீது தொடர்ந்து, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் கடந்த 17ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மிளகாய்ப்பொடி வெங்கடேஷிடம் வழக்கு தொடர்பாக, மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டி செங்குன்றம் காவல் துறையினர், பொன்னேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட மிளகாய்ப்பொடி வெங்கடேஷை செங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் கைதான மிளகாய்பொடி வெங்கடேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது: 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chilli powder Venkatesh ,Chennai ,Venkatesh ,Chilli powder ,Padiyanallur ,P.D. Murthy Nagar ,Chengunram ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக...