2000 ஆண்டு ஆனாலும் தமிழகத்தில் பாஜவால் காலூன்ற முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

* காவி சாயத்தை அழித்து வண்ண கோலமிடுவோம்…

இளைஞரணி மாநில மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்வைத்து, இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நடக்கிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவில், கழகத்தின் பவள விழா ஆண்டில் இதனை நடத்துவது நமக்கு பெருமை. இதற்கு வாய்ப்பளித்த நமது தலைவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சேலத்து சிங்கம் வீரபாண்டியார் மாவட்டத்தில், வெற்றிகளை குவிக்கும் நோக்கில் நாம் இங்கு திரண்டிருக்கிறோம். இன்று ராமேஸ்வரத்தில் ஒருவர் 22 கிணறுகளில் நீராடி விட்டு, இராமநாதசுவாமியை பார்க்க சென்றுள்ளார். ஆனால் ராமசாமியின் பேரன்களோ, நாட்டை முன்னேற்றுவதற்காக 22க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். இப்போது இந்த மாநாட்டால், ஒட்டுமொத்த இந்தியாவும் சேலத்தை உற்றுநோக்குகிறது. 10 ஆண்டு பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டும் படை, இங்கிருந்து தான் புறப்படுகிறது. திருமண நாள், சட்டமன்ற தேர்தலில் ஜெயித்த நாள் என்று, எனக்கு பல முக்கிய நாட்கள் இருந்தாலும், இந்த 21ம் தேதியே என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறி விட்டது.

நீட் விலக்கிற்காக 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து பெறுவோம் என்றோம். தற்போது 85 லட்சம் கையெழுத்துகள் பெற்றுள்ளோம். இதற்கு அடுத்த கட்டமாக டெல்லியில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம். இதற்கு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அடிமை அதிமுக ஆட்சியில், தவழ்ந்து வந்து முதல்வரான பழனிசாமியால், மாநிலத்தின் உரிமைகளை இழந்தோம். கல்வி, சுகாதாரம் என்று எல்லாவற்றையும் ஒன்றிய அரசு பறித்து விட்டது. நமக்கான வரி வருவாயையும் கொடுப்பதில்லை. கடந்த 9 ஆண்டுகளில், ரூ.5 லட்சம் கோடி வரி கொடுத்துள்ளோம். ஆனால் திருப்பி தந்தது ரூ.2 லட்சம் கோடி மட்டுமே. மாநில உரிமை மீட்பு என்பது, இப்போது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக நமது கல்வி உரிமை, பண்பாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடக்கிறது.

நீட் எனும் உயிர்க்கொல்லி நோய்க்கு, 11 குழந்தைகளை இழந்துள்ளோம். மொழி என்பது நமது உரிமை மட்டுமல்ல, உயிர். அந்த மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தும் போது, எங்களது உயிரை கொடுத்தும் காப்பாற்றுவோம். இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், தமிழகத்தில் பாஜவால் கால் ஊன்ற முடியாது. காரணம், இங்கு நடப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி. நாங்கள் ஈ.டிக்கும், மோடிக்கும் எப்போதும் பயப்பட மாட்டோம். திமுக தொண்டர்கள் அல்ல, தொண்டர்களின் குழந்தைகள் கூட பயப்பட மாட்டார்கள். களத்தில் இறங்கி மக்களுடன் பயணிப்பவர் நமது தலைவர். திராவிட இயக்கத்தை மேலும் ஒரு நூற்றாண்டுக்கு பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் இனம் வாழும். சமூகநீதியும், சமத்துவமும் பாதுகாக்கப்படும். அதற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் நாம் ஜெயிக்க வேண்டும்.

அண்ணா அறிவாலயத்தில், 2018ம் ஆண்டு உணர்ச்சி மிகுந்த உரை ஒன்றை தலைவர் ஆற்றினார். சாதி, மத பேதம் இல்லாத சமூகம் வேண்டும். திருநங்கைகளும், மாற்றுத்திறனாளிகளும் நலம்பெற வேண்டும். காவிச்சாயம் பூச நினைக்கும் பாசிச ஆட்சியை விரட்ட வேண்டும். அதுதான் எனது லட்சியம் என்றார். நிச்சயமாக உங்களது லட்சியத்தை இளைஞரணி நிறைவேற்றும். காவிசாயத்தை அழித்து விட்டு, வண்ண கோலமிட்டு வலம்வர நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். இளைஞரணிக்கு தாயுள்ளத்தோடு நிறைய பொறுப்புகளை கொடுத்துள்ளீர்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும், அதிக வாய்ப்புகளை தர வேண்டும் என்று தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

* திமுகவுக்கு தொடர் வெற்றி ஏன்? குட்டிக்கதை சொன்ன உதயநிதி

உதயநிதி பேசுகையில் ஒரு குட்டிக்கதை சொன்னார். அதில் அவர் கூறியதாவது: சமீபகாலமாக வரும் அனைத்து தேர்தல்களிலும் நாம் வெற்றிகளை குவித்து வருகிறோம். இதற்கான காரணம் என்னவென்று, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் யோசித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு குட்டிக்கதையை சொல்கிறேன். சிறுவன் ஒருவன், அவன் வயது உள்ளவர்களுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வெற்றி பெற்றான். அனைவரும் அவனை பாராட்டினார்கள். ஆனால் ஒரு முதியவர் மட்டும், அவனை பாராட்டவில்லை. அதன்பிறகு அவனைவிட வயது மூத்தவர்களுடன் ஓடியும் வெற்றி பெற்றான். அப்போதும் அந்த முதியவர் அவனை பாராட்டவில்லை. இதற்கு, நான் போட்டிகளில் வெற்றி பெறும்போது, நீங்கள் மட்டும் ஏன் பாராட்டுவதே இல்லை? என்று கேள்வி எழுப்பினான்.

இப்படிப்பட்ட நிலையில், சத்தான உணவு இல்லாத ஒரு சிறுவன், பார்வை குறைபாடு உள்ள ஒரு சிறுவன் என்று இருவர் களத்தில் நின்றனர். அவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு களத்தில் ஓடு என்றார் முதியவர். அப்போது 3 பேரும் வெற்றி பெற்றனர். முதியவர் உள்ளிட்ட அனைவருமே சிறுவனை பாராட்டினர். தனித்து ஓடாமல், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள், 3ம் பாலினத்தவர் என்று எளியவர்களின் கரங்களை பிடித்து, நாங்கள் ஓடிக்கொண்டே இருப்பதால்தான், வெற்றிகள் எங்களை தொடர்கிறது. இதுதான் திமுகவின் வெற்றிக்கு காரணம். இந்த வெற்றியை வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், நிச்சயம் அடைவோம். அதற்கு நமது இளைஞர் படை உற்சாகத்துடன், பம்பரமாய் சுழன்று உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post 2000 ஆண்டு ஆனாலும் தமிழகத்தில் பாஜவால் காலூன்ற முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: