×
Saravana Stores

யூரோ கோப்பை கால்பந்து பைனலில் ஸ்பெயின்

மியூனிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில் பிரான்சை வீழ்த்திய ஸ்பெயின் 5வது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது. மியூனிக் நகரில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின் – பிரான்ஸ் அணிகள் மோதின. 7வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஆன்டனி கிரீஸ்மேன் அடித்த பந்தை வாங்கிய கேப்டன் கிளியன் எம்பாப்பே, அதை கோல் பகுதிக்கு அடித்தார். அதை தலையால் முட்டி கோலாக்கினார் ரண்டல் கோலோ முயானி. அதனால் பிரான்ஸ் முன்னிலை பெற, அந்த அணியின் ரசிகர்களால் அரங்கமே அதிர்ந்தது. அதன் பிறகு கூடுதல் வேகம் காட்டிய ஸ்பெயினின் முயற்சிக்கு 21வது நிமிடத்தில் 16வயது வீரர் லாமின் யாமல் மூலம் பலன் கிடைத்தது. நடுகளத்தில் இருந்த தடுப்பாட்டக்காரர் நச்சோ, பந்தை கோல் பகுதியில் இருந்த டானி ஒல்மாவுக்கு மடை மாற்றினார். அவர் அதை கோல் பகுதிக்கு கடத்த. சரியாக அங்கு ஓடிவந்த யாமல் அழகான கோலாக மாற்றினார்.

அதனால் ஆட்டம் சமநிலைக்கு வந்தது. அடுத்த சில நிமிடங்களில் இரு அணிகளுக்கும் கோலடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 25வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஒல்மா அடித்த பந்தை வாங்கிய முன்னாள் கேப்டன் ஜிசஸ் நவாஸ் அதை கோல் நோக்கி அடித்தார். ஆனால் அங்கு ஓடி வந்த பிரான்ஸ் வீரர் வில்லியம் சலிபா தடுத்து வெளியேற்றினார். கோல் பகுதிக்கு வெளியில் வந்த பந்தை, எதிரணி வீரர்களை ஏமாற்றி ஒல்மா கோலாக மாற்றினார். இடைவேளையின்போது ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 2வது பாதியில் இரு அணிகளும் மேற்கொண்ட முயற்சிகள், அதிலும் பிரான்ஸ் மேற்கொண்ட கூடுதல் முயற்சிகள் கடைசி வரை பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஸ்பெயின் 5வது முறையாக யூரோ கோப்பை பைனலுக்கு முன்னேறியது.

The post யூரோ கோப்பை கால்பந்து பைனலில் ஸ்பெயின் appeared first on Dinakaran.

Tags : Spain ,Euro Cup ,Munich ,France ,Euro Cup football ,Dinakaran ,
× RELATED ஸ்பெயின் வெள்ளம்.. 50 வருடத்தில் காணாத கனமழை: 200ஐ கடந்த பலி எண்ணிக்கை!!