மேற்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் போராட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதனால் அரசு ஒப்பந்த பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஜல்லியை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு யூனிட் ரூ.1700 க்கு விற்கப்பட்டது. மேலும் படிப்படியாக விலை உயர்ந்துவரப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதாவது முதல் வாரத்தில் 3200 ரூபாய் ஆக விலை அதிகரித்துள்ளது. இதே போன்று எம் சாண்ட், டி சாண்ட் ஆகியவற்றினுடைய விலையும் யூனிட்டிற்கு 2000 ரூபாய் அதிகரித்து சுமார் 60சதவீதம் அளவிற்கு விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் 50 முதல் 60 சதவீத அளவிற்கான இழப்பு ஏற்படுவதாக கூறி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்திருக்கக்கூடியவர்களுக்கு பெரும் இழப்பை சந்திப்பதால் அவர்களுக்கு அரசு நிர்ணயிக்க கூடிய விலை விகித பட்டியலில் 50 முதல் 60 சதவீதம் அளவிற்கான விலை உயர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து அரசு ஒப்பந்ததார்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை கட்டக்கூடிய சாமானிய மக்களும் இந்த விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு என்பது எந்த ஒரு அடிப்படை காரணமும் இல்லாமல் குவாரி உரிமையாளர்களே ஒரு சிண்டிகேட் அமைத்து தன்னிச்சையாக விலையை உயர்த்தி இருப்பதாக கட்டுமானத்துறையினர் புகார் தெரிவித்தனர்.
அதே போல எம் சாண்ட், டி சாண்ட் ஆகியவற்றின் உற்பத்தியையும் 30 சதவீதம் அளவிற்கு குறைத்து ஒரு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி இருப்பதால் மேற்கு மாவட்டங்களில் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது போன்ற குளறுபடிகள் கலைந்து விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் சீரான விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க கோரி இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு இத்துறையின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் 200 கட்டுமான பொறியாளர்கள் மற்றும் 200 ஒப்பந்ததாரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்த பணிகள் மட்டுமே இன்றும், நாளையும் தடைபட்டு இருக்கின்றன. மேலும் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2 நாட்கள் போராட்டத்திற்கு பின்பாக 29ம் தேதி உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
The post ஈரோட்டில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு: கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.