எந்த தேர்தல் என்றாலும் தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை: ‘தமிழகத்தை பொறுத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும்’ என எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி: தே.ஜ. கூட்டணியில் சிறிய, பெரிய கட்சிகள் என்று இல்லாமல், அனைத்து கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றன. பாஜ கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜ கூட்டணி வெல்லும். சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதிக இடங்களில் போட்டியிடும் என்று சில கட்சி தலைவர்கள் கூறுவது, அவர்களின் கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக சொல்லப்படக்கூடிய கருத்து.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வதித்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் தலைமை தாங்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தபோதும், 2021 சட்டமன்ற தேர்தலின்போதும் தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் போட்டியிட்டது. அது தொடரும். நூற்பாலைகள், கார்மென்ட்ஸ் தொழில் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி கோவை. பஞ்சு மற்றும் இதர கழிவு பஞ்சின் விலையை குறைக்க வேண்டும் என்று ஜவுளி துறையினர் கோரிக்கை வைத்து உள்ளனர். அவர்களின் இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய அரசின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post எந்த தேர்தல் என்றாலும் தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: