சென்னை: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்சயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டண வசூலை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் அதிமுகவினரும் பங்கேற்றனர். அப்போது மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி; மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் டோல் கேட் விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதனை அகற்றக் கோரி பலமுறை முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். எனவே அப்பகுதி மக்களுடன் இணைந்து கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்றும், மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் செல்லும்போது அவர்களுக்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டுமென்றும் அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்து போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பேரவையின் செயலாளரும்,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான, ஆர். பி. உதயகுமார் அவர்களையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களையும், அதிமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இப்பகுதி மக்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், வலியுறுத்துகிறேன் என்று கூறினார்.
The post மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.