ஈரோடு: ‘எடப்பாடிக்கு நான் தூது விடவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ ஆதரவு இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது’ என ஓபிஎஸ் கூறினார். ஈரோட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று இரவு ஈரோடு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: மேல் முறையீடு வழக்கின் தீர்ப்பு நீதிபதியின் கையில் உள்ளது. அதிமுகவின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் நாங்களும், அமமுகவும் வாபஸ் வாங்கிவிட்டோம். இரட்டை இலை சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், 66 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் தோற்றுள்ளார். இதிலிருந்தே நீங்கள் அவர்களது நிலை என்ன என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
கட்சி ஒன்றுபட்டால்தான் வெற்றி பெற முடியும் என கூறிவிட்டேன். நானும், டி.டி.வி. தினகரனும் இணைந்து தற்போது தேர்தல் பணிகளை செய்து கொண்டுள்ளோம். எங்களுடன் இணைவது குறித்து சின்னம்மாதான் அறிவிக்க வேண்டும். மீண்டும் இணைவதற்கு நான் தூதுவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுவது, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவின் ஆதரவு இல்லாமல் எடப்பாடி பழனிசாமி (அதிமுக) வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post எடப்பாடிக்கு நான் தூது விடவில்லை பாஜ ஆதரவு இல்லாமல் அதிமுக வெற்றி பெறாது: ஓபிஎஸ் தடாலடி appeared first on Dinakaran.