×

ஏரிகளின் உபரி நீரில் அரித்துச் செல்லப்பட்டகிழக்கு கடற்கரை சாலை உடனடியாக சீரமைப்பு: மீண்டும் போக்குவரத்து தொடங்கியது

சென்னை: ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் அரித்துச் செல்லப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் ராட்சத பள்ளம் உடனடியாக சீரமைக்கப்பட்டு, 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது. வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது. 2 நாட்கள் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி ஏரி, கடம்பாடி ஏரி முழுவதும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், முழு கொள்ளளவை எட்டிய 2 ஏரிகளில் இருந்தும் கலங்கல் வழியாக உபரிநீர் ஆர்ப்பரித்து வெளியேறியது. கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்ப்பரித்து சென்றதால் கடம்பாடி பகுதியில் சாலையின் ஒரு குறிப்பிட்ட பகுதி மழைநீரில் அரித்து பெரிய பள்ளம் ஏற்பட்டது.

இதனால், மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் கடந்த 2 நாட்களாக வாகனங்கள் செல்ல மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தடை விதித்து, வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில், போலீசார் மூலம் பேரி கார்டு தடுப்பு ஏற்படுத்தினார். தொடர்ந்து, புதுச்சேரி செல்லும் அனைத்து வாகனங்களையும் திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு வழியாக திருப்பி விட்டனர். இதுகுறித்து, தினகரன் நாளிதழிலும் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, விரைந்து வந்த ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சாலையை, பொக்லைன் இயந்திரம் மூலம் போர்க்கால அடிப்படையில் சீரமைத்தனர்.

பிறகு 2 நாட்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், போலீசார் தடையை நீக்கி இசிஆரில் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். மேலும், பல கிமீ தூரம் சுற்றிச் சென்று சிரமமடைந்த வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post ஏரிகளின் உபரி நீரில் அரித்துச் செல்லப்பட்டகிழக்கு கடற்கரை சாலை உடனடியாக சீரமைப்பு: மீண்டும் போக்குவரத்து தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : coast ,CHENNAI ,East Coast Road ,Dinakaran ,
× RELATED அக்கரை – மாமல்லபுரம் சாலை சுங்கக் கட்டணம் நள்ளிரவு உயர்வு