அப்போது சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியர் ஒருவர், அந்த இலங்கை டிரான்சிட் பயணியிடம் நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்தார். பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியே செல்வதற்காக நுழைவாயில் அருகே வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சந்தேகத்தில் ஒப்பந்த ஊழியரை சோதனையிட்டனர். அதில் அவருடைய உள்ளாடைக்குள் ஒரு பார்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து வெளியில் எடுத்தனர். அதை பிரித்து பார்த்ததில், அதனுள் தங்கப் பசை இருந்தது தெரியவந்தது. அவரை வெளியில் விடாமல் நிறுத்தினர்.
விசாரணையில் அவர் சரிவர பதில் அளிக்கவில்லை என்பதால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அந்த ஒப்பந்த ஊழியரையும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க பசையையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தங்கப்பசை பார்சலை ஆய்வு செய்தபோது, அதில் 3.5 கிலோ தங்கப்பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.8 கோடி என தெரியவந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தினர்.
அதில், துபாயிலிருந்து கடத்திக் கொண்டு வந்த தங்கபசையை ஒப்பந்த ஊழியர் மூலம் சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் அந்த கடத்தல் பயணி, இலங்கைக்கு தப்பிச் செல்வதற்காக, இலங்கை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டார் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து சுங்கத்துறையினரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் விரைந்து செயல்பட்டு, ஒப்பந்த ஊழியரை அழைத்துக் கொண்டு, இலங்கை செல்ல இருந்த விமானத்துக்குள் ஏறி கடத்தல் பயணியை அடையாளம் கண்டு கீழே இறக்கினார்கள். தொடர்ந்து கடத்தல் பயணி மற்றும் விமான நிலைய ஒப்பந்த ஊழியர் ஆகிய இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை விமான நிலையத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரூ.2 கோடி மதிப்புடைய, 4 கிலோ கடத்தல் தங்கத்தையும், விமான நிலைய ஒப்பந்த ஊழியர் மற்றும் கடத்தல் பயணியையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அடுத்த இரு தினங்களில் மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் நடந்திருப்பது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.1.8 கோடி தங்கப்பசை பறிமுதல்: கடத்தல் பயணி, விமான நிலைய ஊழியர் கைது appeared first on Dinakaran.