மதுபோதையில் தாத்தா, பாட்டியை கழுத்தை நெரித்து கொன்றேன்: கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பில்லூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலிவு (86). இவரது மனைவி மணி (65). கலிவு சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இவர்களுக்கு முருகன் உள்பட மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கலிவு, மணி இருவரும் பில்லூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தபோது அவர்களின் பேரன் அருள்சக்தி (முருகன் மகன்) மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் பதுங்கியிருந்த அருள்சக்தியை (19) நேற்றிரவு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தனது தாத்தா, பாட்டியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக அருள் சக்தி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:

நான் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் காவல்நிலையம் அருகே எனது தந்தை முருகனுடன் வசித்து வருகிறேன். தந்தை நடத்தும் சலூன் கடையில் முடிதிருத்தும் வேலை செய்து வருகிறேன். எனக்கு குடிப்பழக்கம் உண்டு. எனது தந்தை எனக்கு செலவுக்கு தரும் பணத்தில் மது குடிப்பது வழக்கம். ஆனால் அது போதாததால் மதுகுடிப்பதற்காக விழுப்புரம் அருகே பில்லூர் மாரியம்மன்கோவில் தெருவில் வசித்து வரும் எனது தாத்தா கலிவு, பாட்டி மணி ஆகியோரிடம் பணம் வாங்கிச்செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம்மாலை மது குடித்து விட்டு மீண்டும் மது குடிக்க பணம் வாங்குவதற்காக தாத்தா வீட்டுக்கு வந்தேன்.

அப்போது அவரிடம் பணம் கேட்டேன். அவர்கள் தர மறுத்ததால் குடி போதையில் இருந்த நான் ஆத்திரமடைந்து கையால் தாத்தா மற்றும் பாட்டியின் கழுத்தை நெரித்தேன். இதில் இருவரும் மயங்கி விழுந்து விட்டனர். உடனே பயந்துபோன நான் அங்கிருந்து வெளியே ஓடிவந்தேன். பின்னர் பில்லூரில் இருந்து எனது செல்போனில் தந்தையை தொடர்பு கொண்டு தாத்தா, பாட்டியை அடித்து விட்டதாக கூறிவிட்டு எனது வீட்டுக்கு வந்துவிட்டேன். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. நேற்றிரவு போலீசார் வந்து என்னை கைது செய்த பின்னர்தான் எனது தாத்தா, பாட்டி இறந்த விபரம் எனக்கு தெரியவந்தது. இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

The post மதுபோதையில் தாத்தா, பாட்டியை கழுத்தை நெரித்து கொன்றேன்: கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: