பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பருத்தி பயறுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

செம்பனார்கோயில்: தரங்கம்பாடி அருகே பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிறுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது. இதை வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த ஆண்டு பருத்தி நல்ல விலை போனதால் இந்த ஆண்டு அதிக அளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இதில் செம்பனார்கோயில் வட்டாரத்தில் 2 ஆயிரத்து 100 ஹெக்டேர் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பூ பூத்து, காய் காய்த்து வெடித்து வருவதால் விவசாயிகள், பருத்தி அறுவடை பணியை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பருத்தி செடிகளில் மாவுப்பூச்சி தாக்கியது. மாவுப்பூச்சியில் பப்பாளி மாவுப்பூச்சி, இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். பருத்தி மாவுப்பூச்சி, இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி, வால் மாவுப்பூச்சி மிக முக்கியமானவையாகும். மாவுப்பூச்சியை சுற்றியுள்ள வெள்ளை நிற மெழுகு படலம் பஞ்சுபோல் அடர்ந்த முட்டைகளுடன் கூடிய இப்பூச்சி கூட்டங்கள் இலைகள், இளம் தண்டுகளில் பரவிக் காணப்படுகிறது. இதன் காரணமாக பருத்தி மகசூல் குறைந்து விடும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த செம்பனார்கோயில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன், உதவி வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வேளாண்மை குழுவினர் நல்லாடை பகுதிக்கு சென்று சாகுபடி வயலில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பருத்தியை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினர். அதனை தொடர்ந்து ட்ரோன் மூலம் அப்பகுதி விவசாயிகள் முன்னிலையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள், பூச்சி தாக்குதல் குறையும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.

The post பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பருத்தி பயறுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: