திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 1,355 கோயில்களில் குடமுழுக்கு விழா: ரூ.3,776 கோடியில் 8,436 கோயில்களில் பணிகள், அறநிலையத்துறை தகவல்

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 1,355 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள், ரூ.3,776 கோடியில் 8,436 கோயில்களில் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சியின் மூன்றாண்டுகளில் 1,355 கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு விழாக்கள் நடந்துள்ளன. ரூ.3,776 கோடியில் 8,436 கோயில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 5,775 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 143 கோயில்களின் குளங்களைச் சீரமைப்பதற்கு ரூ.84.16 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

3 கோயில்களில் புதிய திருக்குளங்கள் ரூ.2.71 கோடியில் அமைக்கப்படுகின்றன. 2022-23ல் 6 கோயில்களுக்கு ரூ.28.78 கோடியில் புதிய ராஜகோபுரங்கள் கட்டப்படுகிறது. 15 கோயில்களில் ராஜகோபுரங்கள் ரூ.25.98 கோடியில் கட்டப்பட உள்ளன. அன்னதான திட்டம் இதுவரை 756 கோயில்களில் நடந்து வருகிறது. ரூ.5577.35 கோடி மதிப்பிலான 6140.59 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு உள்ளது.
ரூ.257.28 கோடியில் மொத்தம் 73 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்களின் நலனுக்காக 17 தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் ரூ.70.50 கோடியில் நடந்து வருகின்றன.

6 கோயில்களுக்கு சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் உருக்கப்பட்டு, 344.334 கி.கி தங்கக் கட்டிகளாக மாற்றி, ரூ.191.65 கோடியில் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு வட்டி வருவாய் ரூ.4.31 கோடி வரப்பெறுகிறது. ஒரு கால பூஜை திட்டத்தில் கோயில் ஒன்றுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 2,000 கோயில்களுக்கு அரசு மானியம் ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோயிலுக்கு ஓர் அர்ச்சகர் வீதம் பதிவு செய்து, மாத ஊக்கத் தொகை ரூ.1.000 வீதம் வழங்கப்பட்டு ஜனவரி 2024 வரை 15,753 அர்ச்சகர்கள் பயனடைந்துள்ளனர்.

அர்ச்சகர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10,000 வீதம் நடப்பாண்டில் 400 மாணவர்களுக்கு கல்வித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ரூ.80.50 கோடியில் பழனி மற்றும் இடும்பன் மலை இடையே கம்பிவட ஊர்தி, அனுவாவி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய கோயில்களில் கம்பிவட ஊர்திகள் அமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கும்பகோணம், சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயிலில் ரூ.3.55 கோடியில் மின்தூக்கி அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது.

தினக்கூலி தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிந்த 1,278 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர். ரூ.50,000 மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் 1,100 இணைகளுக்கும், 128 மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. 500 பக்தர்கள் ராமேசுவரம், ராமநாத சுவாமி கோயிலிலிருந்து காசி, விசுவநாத சுவாமி கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.125 லட்சம் செலவிலும், 1,000 பக்தர்கள் அறுபடைவீடுகளுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு நிதி ரூ.1.50 கோடி செலவிலும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

2022-23ம் ஆண்டில் முக்திநாத் ஆன்மிக பயணம் சென்று வந்தவர்களுக்கு தலா ரூ.20,000 வீதம் பயண செலவாக வழங்கப்படுகிறது.  கோயில்கள் மூலம் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் தற்போது 212 மாணவர்கள் முழுநேரமாகவும், 80 மாணவர்கள் பகுதிநேரமாகவும் பயின்று வருகின்றனர். 11 பெண் ஓதுவார்கள் உள்பட 42 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு பணிகளில் தமிழ்நாட்டின் அறநிலையத்துறை பணிகள் மிகச் சிறப்பாக நடப்பதால் திராவிட மாடல் அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

The post திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 1,355 கோயில்களில் குடமுழுக்கு விழா: ரூ.3,776 கோடியில் 8,436 கோயில்களில் பணிகள், அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: