×

திமுக கூட்டணி இந்தியாவிற்கே முன்மாதிரி: சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி

சென்னை: தமிழகத்தில் திமுக தலைமையில் அமைத்துள்ள கூட்டணி இந்தியாவிற்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது என சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து 20 நிமிடங்கள் உரையாடினோம். தமிழக மக்கள் ஆதரவோடு மா.கம்யூ. கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் வெற்றிரமாக நடைபெற்றது. தொடர்ந்து தற்போது தமிழகம் சட்டமன்ற தேர்தலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனநாயக மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசியல் சக்திகளின் தலைமையில் தமிழக மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.

தமிழகத்தில் உருவாக்கியுள்ள அரசியலுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயக மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசியல் சக்திகள் ஒன்றிணைக்கப்படுவதால் தமிழ்நாட்டில் மதவாத சக்திகளால் முன்னேற முடியவில்லை. பாஜக மற்றும் அதிமுக இடையே வெளிப்படையான கூட்டணி உருவாகி உள்ளது. ஆர்எஸ்எஸ் வழங்கிய வழிமுறைகளின் அடிப்படையில், மோடி அரசு நாட்டின் சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருவதை நாம் காண்கிறோம்.

சிறுபான்மையினர் பாதிக்கப்படுகின்றனர் அதற்கு வக்பு திருத்த சட்ட மசோதா ஒரு எடுத்துக்காட்டு. அதிமுக வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக வாக்கு அளித்த பிறகு தற்போது கூட்டணி அமைத்துள்ளது. மேலும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்து இருந்தார். அவ்வாறு செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை.

இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கில் வெற்றிபெற்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் திமுக தலைமையில் அமைத்துள்ள கூட்டணி இந்தியாவிற்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. இது மேலும் வலுவடைய உள்ளது. பாஜக மற்றும் அதிமுக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதால் முக்கிய அரசியல்வாதிகள் இக்கூட்டணியில் இணைய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post திமுக கூட்டணி இந்தியாவிற்கே முன்மாதிரி: சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dimuka Alliance ,India ,CPM ,General Secretary ,M. A. Baby ,Chennai ,Dimuka ,Tamil Nadu ,CBM ,ANNA ,Baby ,First Minister ,K. ,Stalin ,Dima Alliance ,
× RELATED பாஜ இந்திய வாஷிங் மெஷின்; தவெக நவீன...