சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெற்ற வெஸ்டர்ஸ் & சதர்ன் சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கரஸுடன் (20 வயது, ஸ்பெயின்) மோதிய ஜோகோவிச் (36 வயது, 2வது ரேங்க்) 5-7 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் இரு வீரர்களும் விடாப்பிடியாக போராடியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.

அல்கரஸ் மேட்ச் பாயின்ட் வரை சென்ற நிலையிலும், மனம் தளராமல் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 7-6 (9-7) என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட்டில் அனல் பறந்தது. இருவரும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேற, இந்த செட்டும் டை பிரேக்கருக்கு சென்றது. மொத்தம் 3 மணி, 49 நிமிட நேரத்துக்கு நடந்த இப்போட்டியில், ஜோகோவிச் 5-7, 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று 3வது முறையாக சின்சினாட்டி கோப்பையை கைப்பற்றினார்.

இதன் மூலமாக விம்பிள்டன் பைனலில் அல்கரஸிடம் அடைந்த தோல்விக்கு ஜோகோவிச் பழிதீர்த்தார். இருவரும் இதுவரை 4 முறை மோதியுள்ளதில் 2-2 என சமநிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. தனது 39வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச், ‘அல்கரஸுடன் மோதிய பைனல் மறக்க முடியாததாக அமைந்தது. இந்த போட்டியில் நடாலுடன் மோதியது போலவே உணர்ந்தேன். அந்த அளவுக்கு ஒவ்வொரு பாயின்ட்டையும் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே பெற முடிந்தது’ என்றார்.

சின்சினாட்டி தொடரின் முடிவில் முறையே முதல் 2 இடங்களில் உள்ள அல்கரஸ் (9,815), ஜோகோவிச் (9795) இடையே வெறும் 20 புள்ளிகள் மட்டுமே இடைவெளி உள்ளது. இதே தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா (செக்.) உடன் மோதிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 56 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. கோகோ வென்ற முதல் டபுள்.யு.டி.ஏ 1000 பட்டம் இது.

The post சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக ஜோகோவிச் சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: