×
Saravana Stores

தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு, கார வகை விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்: காஞ்சிபுரம் கலெக்டர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு, காரவகை உள்ளிட்ட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் விண்ணப்பித்து கட்டாயம் உரிமம் பெறவேண்டும். ஏற்கனவே உரிமம் பெற்றிருந்தால் புதுப்பித்திருக்கவேண்டும். உரிமம் இல்லாமல் தயாரிப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிப்பு, கார வகை தயாரிக்க தரமான மூலப்பொருள் மட்டுமே பயன்படுத்தி சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்பட பொருள் பயன்படுத்தக்கூடாது. இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நிறமி சேர்க்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி கார வகை தயாரிக்க கூடாது. தயாரிக்கும் இடம், விற்பனை செய்யும் இடம், இருப்பு வைக்கப்படும் இடங்கள் எப்போதும் சுத்தமாக இருத்தல்வேண்டும்.

ஈக்கள், பூச்சிகள் வராமல் இருப்பதற்கு தடுப்பு முறை மேற்கொள்ளவேண்டும். சமுதாய கூடங்கள், கல்யாண மண்டபங்கள் மற்றும் இதர இடங்களில் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பவர்கள் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவை கையாளுபவர்களுக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவச்சான்று பெற்றிருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கான விவரச்சீட்டில் தயாரிப்பாளர் முழு முகவரி, உணவு பொருள் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் தேதி, காலாவதியாகும் நாள், சைவ, அசைவ குறியீடு அவசியம் குறிப்பிட வேண்டும். பால்பொருட்களால் தயாரிக்கும் இனிப்பு வகைகளை மற்ற இனிப்புகளுடன் கலந்துவைத்திருக்கக்கூடாது.

இவற்றை எத்தனை நாட்களுக்குள் உபயோகிக்கவேண்டும் என்பதை லேபிளில் அச்சிடவேண்டும். உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சிபெற்ற நபர் பணியில் இருத்தல்வேண்டும். தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர், கப்புகளை பயன்படுத்தினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். சூடான உணவு பொருட்கள் பிளாஸ்டிக் பேப்பர், கவரில் பொட்டலமிடக்கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம் அல்லது TNFSD Consumer app மூலமும் புகார்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு, கார வகை விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்: காஞ்சிபுரம் கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Diwali festival ,Kalaichelvi Mohan ,eve ,
× RELATED தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில்...