தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு: 5 நிமிடத்திற்குள் விற்று தீர்ந்த தென்மாவட்ட ரயில் டிக்கெட்டுகள்!

சென்னை: நவம்பர் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நவம்பர் 10-ம் தேதி தென்மாவட்டங்களுக்கு பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளன. தீபாவளி பண்டிகை நேரத்தில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நவம்பர் 10-ம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. ரயில் நிலைய கவுண்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.

தென் மாவட்டங்களுக்கான கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை, பொதிகை, பாண்டியன் போன்ற அதிவிரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு டிக்கெட் விற்பனை தொடங்கிய 2 நிமிடங்களில் விற்று தீர்ந்தன. மற்ற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களிலும் 10 நிமிடத்திற்குள் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்தது. இதனால் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தீபாவளிக்கு முன்தினமான நவம்பர் 11-ம் தேதி பயணம் செய்வதற்கு நாளை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் சிறப்பு ரயில் அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு: 5 நிமிடத்திற்குள் விற்று தீர்ந்த தென்மாவட்ட ரயில் டிக்கெட்டுகள்! appeared first on Dinakaran.

Related Stories: