தமிழ்நாட்டில் சாலைகள், பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த கொடி கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிடக் கோரி அரவிந்தாக்‌ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். பல்வேறு அரசியல் கட்சிகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும்.

சட்ட வரம்புக்கு உட்பட்டு மட்டுமே அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். பாஜ கொடிக்கம்பம் நட அனுமதித்தால், மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு பாதிக்கப்படுவதுடன், பொது சொத்துகளுக்கும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என்று அரசு எந்த ஒரு அறிவிப்பையும் பிறப்பிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது. இது தொடர்பாக உள்துறை செயலாளருக்கும் டிஜிபிக்கும் கடந்த செப்டம்பர் 23ம் தேதி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெறும் அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே விளம்பர பலகைகள் வைப்பது, கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். எந்த விவரங்களும் இல்லாத இந்த மனுவை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post தமிழ்நாட்டில் சாலைகள், பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த கொடி கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: