திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி கைதான விவகாரம் ஒன்றிய அரசு அதிகாரிகளின் குற்றங்களை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஒன்றிய அரசு அதிகாரிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களை மாநில போலீஸ் மற்றும் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தலாம் அதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, சுரேஷ் பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கானது திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்த ரிட் மனுவை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த மார்ச் 20ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்கறிஞர் குமணன் ஆகியோர், ‘‘அங்கித் திவாரி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில், விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்தாலும் எந்தவித நிவாரணமும் வழங்க கூடாது. குறிப்பாக அங்கித் திவாரியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க முயற்சி செய்கிறது. அதனை ஏற்க முடியாது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அங்கித் திவாரி தன்னை எந்த விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும் எனவும் கேட்க முடியாது. அவருக்கு அந்த உரிமை கிடையாது’’ என்று தெரிவித்தார். இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘ஒன்றிய அரசு அதிகாரிகள் குற்றங்களில் ஈடுபடும் போது அதை மத்திய விசாரணை அமைப்புகளும் விசாரிக்கலாம். அதேநேரத்தில் மாநில போலீஸ் உள்ளிட்ட விசாரணை அமைப்புகளும் விசாரிக்கலாம். மாநில அரசு விசாரணை அமைப்புகள் விசாரிக்கவே கூடாது என்று நாங்கள் எந்தவித தடையும் விதிக்க முடியாது.

குறிப்பாக இந்த வழக்கு விவகாரத்தில் மனுதாரர் ஜாமீன் கேட்க மட்டுமே உரிமை உள்ளது. மேலும் ஒன்றிய அரசு அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகள் அனைத்திலும், மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணை தான் வேண்டும் என்று கேட்டு கட்டாயப்படுத்தவும் முடியாது. குறிப்பாக நமது கூட்டாட்சி சட்ட விதிகள் அதுபோன்று அமைக்கப்படவில்லை. இருப்பினும் இந்த வழக்கின் விசாரணையை அடுத்து வரும் ஏதேனும் ஒரு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம்.

அதுவரையில் அங்கித் திவாரிக்கு முன்னதாக வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்படுகிறது. இருப்பினும் விசாரணை நீதிமன்றம் அழைக்கும் பட்சத்தில் அவர் நேரடியாக ஆஜராக வேண்டும். ஒருவேளை விசாரணை நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கினால் அங்கித் திவாரி மத்திய பிரதேசத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் இருந்து ஆன் லைன் மூலம் ஆஜராகி வழக்கு விசாரணையை மேற்கொள்ளலாம்’’ என்று உத்தரவிட்டனர்.

The post திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி கைதான விவகாரம் ஒன்றிய அரசு அதிகாரிகளின் குற்றங்களை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: