திண்டுக்கல்லில் பரபரப்பு!: ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளி கர்ப்பிணி மனைவி கொலை.. மது போதையில் கணவன் வெறிச்செயல்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் இருந்து கர்ப்பிணி மனைவியை கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும், நத்தம் கல்வேளிப்பட்டியை சேர்ந்த வளர்மதிக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் ஞாயிறு அன்று இரவு கணவன், மனைவி இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதி நோக்கி சென்ற அரசு பேருந்தில் சென்றுள்ளனர். கணவன், மனைவி இருவரும் கோபால்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ஏறி, நத்தத்தில் உள்ள வளர்மதியின் தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக சென்றுள்ளனர்.

பாண்டியன் மது போதையில் இருந்ததாகவும், கணவன், மனைவி இடையே பேருந்துக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கனவாய்ப்பட்டி, ஒத்தக்கடை அருகே உள்ள பாச்சா கடை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பின் பக்க படிக்கட்டில் இருந்து பாண்டியன் அவரது மனைவியை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த வளர்மதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பேருந்தில் குறைந்த அளவிலேயே பயணிகள் இருந்ததாலும், அனைவரும் பேருந்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்ததாலும் யாரும் இச்செயலை கவனிக்கவில்லை.

மனைவியை தள்ளிவிட்டு கொலை செய்த கணவனே பேருந்தின் முன் பகுதிக்கு சென்று எனது மனைவியை நானே கீழே தள்ளிவிட்டேன்… பேருந்தை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி, சாணார்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாணார்பட்டி காவல் துறையினர், வளர்மதியின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சாணார்பட்டி போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி மனைவியை கணவனே பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திண்டுக்கல்லில் பரபரப்பு!: ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளி கர்ப்பிணி மனைவி கொலை.. மது போதையில் கணவன் வெறிச்செயல்..!! appeared first on Dinakaran.

Related Stories: