திண்டுக்கல்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஸ்டார் விற்பனை களைகட்டி வருகிறது.உலகம் முழுவதும் வரும் டிச.25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயம், அலுவலகம், பள்ளிகளில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். மேலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, பலூன்களை கட்டி பறக்க விடப்படும்.
மேலும் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டார்களை தொங்கவிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடி மகிழ்வர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 20 நாட்களே உள்ளதால் திண்டுக்கல்லில் ஸ்டார் விற்பனை சூடுபிடித்துள்ளது. திண்டுக்கல் பெரியகடை வீதி, மாநகராட்சி அலுவலகம் ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள கடைகளில் வண்ண, வண்ண ஸ்டார்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பல வண்ணங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட ஸ்டார்களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து கடை விற்பனையாளர் பிரித்விராஜ் கூறுகையில், ‘சாதாரண பேப்பர் ஸ்டார்கள், பிளாஸ்டிக் ஸ்டார் மற்றும் எல்இடி ஸ்டார்கள், ரூ.10 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர கிறிஸ்துமஸ் தொப்பி, சீரியல் லைட், தொப்பி டிரஸ், பொம்மை, பலூன் பொம்மை, சவுண்ட் பொம்மை, குடில் செட், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
The post திண்டுக்கல்லில் களைகட்டும் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை appeared first on Dinakaran.