திருப்போரூரில் இடிந்து விழும்நிலையில் மின் வாரிய அலுவலக கட்டிடம்: சீரமைக்க ஊழியர்கள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் மின் வழங்கல் நிலையம், செயற்பொறியாளர் அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மின் கட்டண செலுத்தல் மையம், மின் வாரிய ஊழியர்கள் குடியிருப்பு ஆகியவை உள்ளன. கடந்த 1971ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால், இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது.

மேலும், இளநிலை செயற்பொறியாளர் அலுவலகம், கட்டண வசூல் மையம் ஆகியவை அமைந்துள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் அவ்வப்போது கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த கட்டிடத்தை பழுதுபார்க்க வேண்டுமென 10 ஆண்டுகளாக மின் வாரிய அலுவலகம் தரப்பில் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலமாக தெரிவித்தும் பாராமுகமாகவே இருந்து வருவதாக உள்ளூர் மின் வாரிய ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல இடங்களில் சுவர்களிலும், மேல் தளத்திலும் சிமென்ட் பூச்சு பெயர்ந்து ஜல்லி மற்றும் கம்பிகள் வெளியே தெரிவதால் பெருமழை பெய்தால் இடிந்து விழுந்து விடும் என ஊழியர்கள் அச்சத்தை தெரிவிக்கின்றனர்.

சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் மின்வாரிய கணக்கீடுகள் குறித்த ஆவணங்கள், புதிய மின் இணைப்புக்கு வழங்க வேண்டிய மின் மீட்டர்கள், பழுது பார்க்க வேண்டிய பழைய மின் மீட்டர்கள் போன்றவை இந்த அலுவலகத்தில்தான் வைக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை கட்டிடம் இடிந்து விழுந்தால் இவற்றை இழக்க வேண்டிய அபாயம் உள்ளதாக ஊழியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஊழியர் குடியிருப்புகள் அதிகமாக சேதமடைந்து வசிக்கவே லாயக்கற்றதாக மாறி விட்டதால் ஊழியர்கள் பலரும் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு சென்று விட்டனர். இதனால், குடியிருப்பு பாம்புகள் வசிக்கும் காட்டு பங்களாபோல் காட்சி அளிக்கிறது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் திருப்போரூர் மின் வாரிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றும், குடியிருப்புகளை புதியதாக கட்டி மின் வாரிய ஊழியர்கள் இங்கேயே தங்கி பணிபுரிய செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post திருப்போரூரில் இடிந்து விழும்நிலையில் மின் வாரிய அலுவலக கட்டிடம்: சீரமைக்க ஊழியர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: