லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியது; வீட்டில் ரூ.12 லட்சத்தை புதைத்த சார்பதிவாளருக்கு பதிவு இல்லாத பணி: பதிவுத்துறை அதிரடி

வேலூர்: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் வீட்டில் புதைத்து வைத்திருந்த ரூ.12 லட்சம் சிக்கியதையடுத்து, சார்பதிவாளர் பதிவு இல்லாத அலுவலக பணிக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.வேலூர் மாவட்டம் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடந்த தணிக்கையின்போது, 8.73 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய அலுவலக உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மேலும் 100 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக தனிநபர்களுக்கு பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த முறைகேடுகளில் முக்கிய புள்ளிகள் பலரை பட்டியலிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதற்கிடையில் கடந்த மாதம் 19ம் தேதி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர். அப்போது, அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சார்பதிவாளர் நித்தியானந்தம் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, மறுநாள்(ஜூன் 20ம் தேதி) வேலூர் அடுத்த கீழ்வல்லம் பகுதியில் உள்ள காட்பாடி சார்பதிவாளர் நித்தியானந்தத்துக்கு சொந்தமான வீட்டில் நடத்திய சோதனையில், தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த ரூ.12 லட்சம் உட்பட மொத்தம் ரூ.13 லட்சத்து 75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதனிடையே மருத்துவ விடுப்பில் சென்ற சார்பதிவாளர் நித்தியானந்தம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிக்கு திரும்பினார். அப்போது அவர், பத்திரப்பதிவு இல்லாத, அலுவலக பணிக்கு செய்யாறு மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியது; வீட்டில் ரூ.12 லட்சத்தை புதைத்த சார்பதிவாளருக்கு பதிவு இல்லாத பணி: பதிவுத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: