அழிவை நோக்கி பாரம்பரிய பர்கூர் செம்மறை மாடுகள்

*பாதுகாக்க வலியுறுத்தல்

ஈரோடு : பாரம்பரிய பர்கூர் செம்மறை மாடுகள் இனம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் மலையில், பாரம்பரிய இனமான செம்மறை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக இங்கு அரசின் ஆராய்ச்சி நிலையமும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம்மாடுகளை காலங்காலமாக வளர்த்து வரும் பர்கூர் மலைக்கிராம மக்களில் பலர், தங்களிடம் உள்ள செம்மறை மாடுகளை வளர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழாவில் தங்களிடம் உள்ள செம்மறை இன இளங்கன்றுகளும் விற்பனைக்காக குவிக்கப்பட்டன.

பர்கூர் மலைக்கிராம மக்கள் கூறியதவாது, ‘‘மாடுகளின் எண்ணிக்கையை எப்போதுமே ஓர் அளவுக்கு மேல் குறைப்பது வழக்கம்தான். ஆனால், தற்போது அதிக அளவில் மாடுகளையும், கன்றுகளையும் விற்பதற்கு கொண்டு சென்றதன் காரணம், வனத்துக்குள் பட்டியமைத்து நாங்கள் மாடுகளை மேய்த்து வருவதுதான் காலங்காலமாக நாங்கள் பின்பற்றி வரும் பாரம்பரிய நடைமுறை. ஆனால், தற்போது அவ்வாறு வனத்துக்குள் பட்டியமைக்க வனத் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

இதனால், நாங்கள் எங்களுடைய வீடுகளில் இருந்து மாடுகளை அன்றாடம் மேய்ச்சலுக்காக கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுவிட்டு, மாலையில் வீடுகளுக்கு ஓட்டி வந்து விடுகிறோம்.இதனால் மாடுகளுக்கு போதிய தீவனம் கிடைப்பதில்லை வனத்துறை எப்போது, காடுகளுக்குள்ளே பட்டி போடக்கூடாது என தடுத்ததோ அன்றிலிருந்து நாங்கள் எங்கள் கால்நடைகளை பராமரிக்க முடியாமல், தீவனம் இல்லாமல் அவதிப்பட்டு வரும் சூழல் ஏற்பட்டு விட்டது. மாடுகள் போதிய உணவின்றி கிடப்பதைச் சகித்துக் கொள்ள முடியாமல் தான் நாங்கள் இந்த வருடம் எங்களிடம் உள்ள மாடுகளையும், கன்றுகளையும் எங்களில் பெரும்பாலானோர், குருநாதசாமி கோயில் திருவிழாவில் விற்றுவிட முடிவு செய்து கொண்டு வந்துள்ளோம்” என்றனர்.

இதுகுறித்து, தமிழ் நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் குணசேகரன் கூறுகையில், ‘‘இங்குள்ள பாரம்பரியமான செம்மறை மாடுகள் இனம் அழிவதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி நிலையம் போதிய கவனமின்றி இருப்பது வருத்தத்துக்குரியதாகும். தற்போது வனத்துறையினரும், பழங்குடி மக்களும், வனங்களுக்குள்ளே பட்டியமைத்து மாடுகள் மேய்ப்பதை தடை செய்திருப்பதால் அவற்றை விற்றுவிடும் சூழ் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, பாரம்பரியமான பர்கூர் செம்மறை மாடுகள் இனம் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டுமெனில், பழங்குடி மக்கள் வனத்துக்குள் பட்டியமைத்து மாடுகளை மேய்த்துக் கொள்ள வனத்துறையினர் மீண்டும் அனுமதிக்க வேண்டும்.தவிர, பழங்குடிகளின் பாரம்பரியை உரிமையை வனத்துறையினர் தடுப்பது மிகவும் தவறான நடவடிக்கையாகும்.

அதுமட்டுமின்றி, 2006 வன உரிமை அங்கீகாரச் சட்டம், வனத்தை நம்பி வாழ்ந்து வரும் மக்களின் பாரம்பரிய உரிமையை சட்டபூர்வமாக அங்கீகரித்திருக்கிறது என்பதை வனத்துறையினர் கவனத்தில் கொள்ளவேண்டும்.எனவே, வனத் துறையினரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, பர்கூர் மலையின் பாரம்பரிய இனமான செம்மறை மாடுகள் இனம் அழிந்திடாமல் பாதுகாத்திட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அழிவை நோக்கி பாரம்பரிய பர்கூர் செம்மறை மாடுகள் appeared first on Dinakaran.

Related Stories: